தூத்துக்குடியில் மே 3-ம் தேதி 5 மையங்களில் நீட் தேர்வு: 1,968 பேர் எழுதுகின்றனர்

செல்போன், ஸ்மார்ட் வாட்ச், கால்குலேட்டர், பேஜர் போன்ற மின்னணு சாதனங்கள், புத்தகங்கள், கைப்பைகள் ஆகியவற்றை தேர்வு மையத்திற்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை என்று தூத்துக்குடி கலெக்டர் விஜூ மகாஜன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் மே 3-ம் தேதி 5 மையங்களில் நீட் தேர்வு: 1,968 பேர் எழுதுகின்றனர்
Published on

தூத்துக்குடி,

நாடு முழுவதும் மே 3-ம் தேதி நடைபெறவுள்ள இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மாவட்ட கலெக்டர் விஷூ மகாஜன் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி (480 பேர்), கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (480 பேர்), தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப்பள்ளி (240 பேர்), அரசு பாலிடெக்னிக் கல்லூரி (288 பேர்), தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (480 பேர்) என 5 மையங்களில் மொத்தம் 1,968 மாணவ, மாணவியர் நீட் தேர்வு எழுத உள்ளனர்.

மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு சிரமமின்றி சென்று வர ஏதுவாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதல் சிறப்புப் பேருந்துகளை இயக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மேலும் தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் வழங்க மின்சார வாரியத்திற்கும், பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள காவல்துறைக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள்:

தேர்வர்கள் காலை 11 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு வர வேண்டும். மதியம் 1:30 மணிக்கு மேல் வருபவர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தடை செய்யப்பட்ட பொருட்கள்:

செல்போன், ஸ்மார்ட் வாட்ச், கால்குலேட்டர், பேஜர் போன்ற மின்னணு சாதனங்கள், புத்தகங்கள் மற்றும் கைப்பைகள் ஆகியவற்றை தேர்வு மையத்திற்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குருச்சந்திரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கல்யாணசுந்தரம், தூத்துக்குடி ஏ.எஸ்.பி. ஆறுமுகம் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com