

சென்னை,
வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு முன்பணமாக ரூ 1000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் மாணவர்களுக்கு முன்பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு, அடையாள அட்டையை காண்பித்து முன்பணம் வாங்கி கொள்ளுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.
தமிழக மாணவர்கள் 5,371 பேர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நீட் தேர்வு எழுதுகின்றனர் என தெரியவந்து உள்ளது. மதுரையிலிருந்து 1,550 பேர், திருச்சியிலிருந்து 1,520 பேர், நெல்லையிலிருந்து 2,301 பேர் கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு சென்று தேர்வு எழுதுகின்றனர்.
நெல்லையில் இருந்து கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு வசதியாக நெல்லையில் இருந்து தினமும் கூடுதலாக மூன்று பஸ்கள் இயக்கப்படும், காலையில் ஒரு பஸ்சும், மாலையில் இரண்டு பஸ்களும் கூடுதலாக இயக்கப்படும். 6-ம் தேதி வரையில் இந்த கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்தும் ஒரு பேருந்து கூடுதலாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.