நெல்லை: வயலுக்கு சென்ற பெண்ணை கடித்து குதறிய கரடி

கோப்புப்படம்
திருக்குறுங்குடி அருகே மீண்டும் அட்டகாசத்தில் ஈடுபட்ட கரடி வயலில் புகுந்து பெண்ணை கடித்து குதறியது.
நெல்லை,
மேற்கு தொடர்ச்சி மலையடிவாரமான திருக்குறுங்குடி பகுதியில் அடிக்கடி கரடி ஊருக்குள் புகுந்து விடுகின்றன. தோட்டங்களுக்கு செல்கிறவர்களையும் தாக்குகின்றன. திருக்குறுங்குடி அருகே வட்டக்குளத்தை சேர்ந்த ராஜ் மனைவி தங்கபுஷ்பம் (வயது 65). இவர் நேற்று பகலில் ஊருக்கு அருகில் உள்ள வயலுக்கு சென்றார். அப்போது கரடி தங்கபுஷ்பத்தை கடித்து குதறியது. இதனால் திடுக்கிட்ட அவர் அலறினார்.
உடனே அக்கம்பக்கத்து வயல்களில் வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் ஓடி வந்து, தங்கபுஷ்பத்தை சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் வள்ளியூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை திருக்குறுங்குடி வனசரகர் யோகேஸ்வரன் சந்தித்து ஆறுதல் கூறினார். கரடியை பிடிக்க கூண்டு அமைக்கப்படும், இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.






