24ம் தேதி முதல் நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் 20 பெட்டிகளுடன் இயக்கம்: பயணிகள் மகிழ்ச்சி

நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயிலின் பயண நேரம் 8 மணி நேரத்திற்கும் குறைவாகவே இருப்பது பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நெல்லை-சென்னை இடையே பகல் நேரத்தில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலானது நெல்லையில் இருந்து (வண்டி எண்: 20666) காலை 6.05 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து வந்தேபாரத் ரெயில் (வண்டி எண்: 20665) மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு நெல்லையை வந்தடைகிறது.
நெல்லை-சென்னை இடையே மற்ற விரைவு ரெயில்களின் பயண நேரமானது 10 மணி நேரம் மற்றும் அதற்கு அதிகமாகவே உள்ள நிலையில், நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயிலின் பயண நேரம் 8 மணி நேரத்திற்கும் குறைவாகவே உள்ளது. வந்தே பாரத் ரெயில் மூலம் மொத்த பயண நேரம் குறைவதால், இந்த ரெயில் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் வந்தே பாரத் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்தனர்.
ஆரம்பத்தில் நெல்லை-சென்னை இடையே வந்தேபாரத் ரெயில் 8 பெட்டிகளுடன் இயக்கப்பட்டது. பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு தற்போது 16 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று வரும் செப்டம்பம் 24ம் தேதி புதன்கிழமை முதல் மேலும் 4 பெட்டிகள், அதாவது இதில், 18 சேர் கார் பெட்டிகளும், 2 எக்சிகியூட்டிவ் சேர் கார் பெட்டிகளுடன் மொத்தம் 20 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது என தென்னக ரெயில்வே மதுரை மண்டலம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனால் கூடுதலாக 312 பேர் இந்த ரெயிலில் பயணம் செய்யலாம். மேலும் ஒரே நேரத்தில் 1440 பயணிகள் வந்தேபாரத் ரெயிலில் செல்ல முடியும் என்பதால் தமிழகத்தின் தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






