நெல்லை: இரவு நேரத்தில் பெண்களை ஏற்ற மறுத்த அரசுப் பேருந்து ஓட்டுநர் – பொதுமக்கள் வாக்குவாதம்

பெண்கள் பேருந்தில் ஏற முயன்றபோது, ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் செல்ல முயன்றுள்ளார்.
நெல்லை: இரவு நேரத்தில் பெண்களை ஏற்ற மறுத்த அரசுப் பேருந்து ஓட்டுநர் – பொதுமக்கள் வாக்குவாதம்.
அரசுப் பேருந்து
Published on: 

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று இரவு நேரத்தில் மகளிருக்கான இலவச அரசுப் பேருந்தில் பெண்களை ஏற்ற ஓட்டுநர் மறுத்த சம்பவம், பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடந்தது என்ன?

நெல்லை மாவட்டத்தில் நேற்று (திங்கட்கிழமை) இரவு மகளிருக்கான இலவசப் பேருந்து ஒன்று குறிப்பிட்ட பேருந்து நிறுத்தத்திற்கு வந்துள்ளது. அப்போது அங்கிருந்த பெண்கள் பேருந்தில் ஏற முயன்றபோது, ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் செல்ல முயன்றுள்ளார்.

பொதுமக்கள் வாக்குவாதம்

இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்த ஒரு பெண்ணின் கணவர் மற்றும் பொதுமக்கள் உடனடியாக ஓட்டுநரை நோக்கிச் சென்று, அரசுப் பேருந்தை முன்னால் நகர்த்த விடாமல் மறித்தனர். இரவு நேரத்தில் பெண்களை ஏற்றாமல் செல்வது முறையா என்று ஓட்டுநரிடம் அவர்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்த இடமே சில நிமிடங்கள் பரபரப்பானது.

பொதுமக்கள் புகார்- கோரிக்கை

"அரசு பெண்களுக்கு இலவசப் பேருந்து வசதி செய்திருந்தாலும், சில ஓட்டுநர்கள் பெண்களை பேருந்தில் ஏற்றாமல் அலட்சியப்படுத்துகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு மிகவும் முக்கியம். அப்படி இருக்கும்போது, பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் பெண்களை ஏற்றாமல் செல்வது கண்டிக்கத்தக்கது" என்று சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெல்லை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com