

வள்ளியூர்:
நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் சமாதான கூட்டம் உதவி கலெக்டர்கள் தலைமையில் நடந்தது.
மீனவர் பிரச்சினை
நெல்லை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்களுக்கும், கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகு மீனவர்களுக்கும் இடையே கடலில் மீன் பிடிப்பது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு அவ்வப்போது மோதல் நடந்து வருகிறது.
இதற்கிடையே நெல்லை மாவட்ட மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமாதான கூட்டம்
இந்தநிலையில் மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, 2 மாவட்ட அதிகாரிகளும், மீனவர்களும் கலந்து கொள்ளும் சமாதான கூட்டம் நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காணப்படும், என்று தெரிவித்தனர்.
அதன்படி நேற்று நெல்லை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்ட சமாதான கூட்டம் வள்ளியூர் யூனியன் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம், கன்னியாகுமரி உதவி கலெக்டர் சேதுராமன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
கூட்டத்தில், இரண்டு மாவட்டங்களை சேர்ந்தவர்களும் தங்களது கருத்துகளை வலியுறுத்தி பேசினார்கள்.
தீர்மானங்கள்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தமிழ்நாடு மீன் பிடிப்பு ஒழுங்குமுறை சட்டம் 1983- ன் படி உள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் அனைத்தும் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மீன்வள துறை அலுவலர்களால் முறையாக அமல்படுத்தப்பட வேண்டும்.
இடிந்தகரை மற்றும் சின்னமுட்டம் மீனவர் கிராமங்களுக்கு இடையே நடைபெற்ற மீன்பிடி பிரச்சினையில் தொடர்புடைய பதிவு செய்யப்படாத மீன்பிடி விசைப்படகு குறைந்தது ஆறு மாத காலம் மீன்பிடி தொழில் முடக்கம் செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணை முடியும் வரை மீன்பிடி விசைப்படகு கடலுக்கு செல்லக்கூடாது.
தமிழ்நாடு மீன்பிடிப்பு ஒழுங்குமுறை சட்டம் 1983-ன் படி தவறுசெய்யும் படகுகளின் மீது அபராத தொகை விதிக்கப்படுகிறது. அபராத தொகையுடன் இனிவரும் காலங்களில் மீன்பிடி தொழில் முடக்கம் செய்யப்படும் மற்றும் வருவாய் துறை மூலம் அடிக்கடி தவறு செய்யும் படகுகளின் உரிமையாளர் மீது இந்திய குற்றவியல் விசாரணை முறை சட்டம் பிரிவு 107-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.
தமிழ்நாடு மீன்பிடிப்பு ஒழுங்குமுறை சட்டத்தினை முறையாக அமல்படுத்த ரோந்து படகுகள் மூலம் இரு மாவட்ட கடல் பகுதியில் கடலோர காவல் குழும போலீசாருடன் இணைந்து ரோந்து பணியை செயல்படுத்திட வேண்டும்.
கன்னியாகுமரி சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் பதிவு செய்யப்படாத மீன்பிடி விசைப்படகுகள் தமிழ்நாடு மீன்பிடிப்பு ஒழுங்குமுறை சட்டம் 1983-ன் படி கடலுக்கு மீன் பிடிக்க செல்ல கூடாது, என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கையெழுத்திடவில்லை
இந்த தீர்மானத்தில் அதிகாரிகள் மற்றும் நெல்லை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் கையெழுத்திட்டனர்.
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கையெழுத்திடாமல் சென்றனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது
அதிகாரிகள்
கூட்டத்தில், மீன்வளத்துறை துணை இயக்குனர் காசிநாதபாண்டியன், இணை இயக்குனர் அமல சேவியர், வள்ளியூர் போலீஸ் துணை சூப்பிரண்டு யோகேஷ்குமார், கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா, கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் துணை சூப்பிரண்டு பிரதாபன், ராதாபுரம் தாசில்தார் வள்ளிநாயகம் மற்றும் நெல்லை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் சங்க பிரதிநிதிகள், கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகு சங்க மீனவர் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடலுக்கு செல்லவில்லை
சமாதான பேச்சுவார்த்தை நடந்ததையொட்டி இடிந்தகரை, பெருமணல், கூட்டப்புளி, பஞ்சல், தோமையார்புரம், கூத்தங்குளி கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை.
இதனால் படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டு இருந்தன.