

திருநெல்வேலி,
திருநெல்வேலி மாநகரம் டவுணில் உள்ள நெல்லையப்பர் - காந்திமதியம்மன் கோவிலின் 520-வது ஆனித் தேரோட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் மாநகர போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
திருநெல்வேலி மாநகரம் டவுணில் உள்ள நெல்லையப்பர் - காந்திமதியம்மன் கோவிலின் 520-வது ஆனித் தேரோட்டம் நாளை (28.6.2026) நடைபெற உள்ளது. இந்த தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பாதுகாப்பாகவும், திருவிழா அமைதியாகவும் நடைபெறுவதற்காக திருநெல்வேலி மாநகர காவல் துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகள் தொடர்பாக நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நெல்லையப்பர் - காந்திமதியம்மன் தேர்கள் வலம் வரும் நெல்லை டவுண், நான்கு ரதவீதிகளிலும் டிரோன் கேமராக்கள் மூலம் வான்வழி கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட காவல் வாகனங்கள் மூலம் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. தேர், நான்கு ரதவீதிகள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 24 மணி நேர பாதுகாப்பு கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மோப்பநாய் பிரிவு படையினர் மூலம் தீவிர வெடிகுண்டு மற்றும் பாதுகாப்பு சோதனைகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத செயல்கள், குற்றச்செயல்கள் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் உடனடியாக கண்டறியப்பட்டு கடுமையான சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர்.
உங்கள் பாதுகாப்பே எங்கள் முதன்மை!. காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள், பாதுகாப்பான திருவிழாவை உறுதி செய்வோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.