நேபாள பெருவெள்ளம்: தமிழர்களை மீட்க என்ன நடவடிக்கை? எத்தனை பேரை மீட்டுள்ளோம்? - உதயநிதி கேள்வி

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை தொடர்புகொள்ள முடியாததால் உறவினர்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாள பெருவெள்ளம்: தமிழர்களை மீட்க என்ன நடவடிக்கை? எத்தனை பேரை மீட்டுள்ளோம்? -  உதயநிதி கேள்வி
Published on

சென்னை,

தமிழக சட்டசபையில் கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 6-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 7, 10,11 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதமும், 12-ந் தேதி நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோரின் பதில் உரையும் இடம் பெற்றது.

இந்த நிலையில், 17-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதுவரை, 27 துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து முடிந்துள்ளது.

நேற்று மிலாது நபி என்பதால் அரசு விடுமுறை விடப்பட்டிருந்தது. இன்று காலை 9.30 மணிக்கு தமிழக சட்டசபை மீண்டும் கூடியது. த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, சட்டசபையில் இதுவரை கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இன்று முதல் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின்

இந்நிலையில் நேபாளத்தில் பெரு வெள்ளத்தில் சிக்கி தமிழர்கள் எத்தனை பேரை நாம் மீட்டுள்ளோம்? என்று பேரவையின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி எழுப்பினார்.

இதுதொடர்பாக சட்டசபையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “நேபாள நாட்டில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 160 பேர் உயிரிழப்பு, 750 பேரை காணவில்லை என செய்திகள் வருகின்றன. சுற்றுலா சென்ற 110 இந்தியர்கள் சிக்கியுள்ளதாகவும், குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்டோர் சென்றிருப்பதாக கூறப்படுகிறது.

ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி

நேபாள சிக்கியுள்ள தமிழர்களை மீட்க சிறப்பு அதிகாரியை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளதா? தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? தமிழ்நாடு அரசு அறிவித்த உதவி எண்களுக்கு எத்தனை அழைப்புகள் வந்துள்ளன? எத்தனை தமிழர்கள் சிக்கியுள்ளனர்? ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் சிக்கி இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இதில் அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை தொடர்புகொள்ள முடியாததால் உறவினர்கள் அச்சத்தில் உள்ளனர்" என்று அவர் கூறினார்.

37 பேரின் கதி என்ன..?

முன்னதாக நேபாள சுற்றுலா வாரியம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சுற்றுலா பயணிகள் 500 பேர் வெள்ளத்துக்கு பிறகு தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். இவர்களில் 291 பேர் வெளிநாட்டினரும், 32 பேர் பாதுகாப்புப் படையினரும் அடங்குவர். வெளிநாட்டினரில் 133 பேர் இந்தியர்கள் என்றும், 37 பேர் வெளிநாடுவாழ் இநதியர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

இந்தியர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 57 பேரும் இருப்பதாக கூறப்படுகிறது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் என்ற தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்த கைலாஷ் மானசரோவர் பயணத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இந்த 57 பேரும் சென்றிருந்தனர். இவர்களில் 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மற்ற 37 பேரின் கதி என்ன? என்று தெரியவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com