விஜய்யுடன் எப்போதும் கூட்டணி இல்லை - பா.ஜ.க. தலைவர் நிதின் நபின்

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி தனித்தே ஆட்சி அமைக்கும் என்று பா.ஜ.க. தலைவர் நிதின் நபின் தெரிவித்தார்.
விஜய்யுடன் எப்போதும் கூட்டணி இல்லை - பா.ஜ.க. தலைவர் நிதின் நபின்
Published on

புதுடெல்லி,

பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபின் தனியார் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது, 5 மாநில சட்டசபை தேர்தல் நிலவரம் குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு அவர் கூறியதாவது:-

சட்டசபை தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களிலும் உள்ள நிலவரம் மாறுபட்டது. இருப்பினும், 5 மாநிலங்களிலும் பா.ஜனதாவுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதாக கருதுகிறேன். அசாம், புதுச்சேரி ஆகியவற்றில் எங்கள் அரசு நிச்சயமாக மீண்டும் அமையும். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

மேற்கு வங்காளத்தை பொறுத்தவரை பா.ஜனதாவுக்கு ஆதரவாக ஆச்சரியமளிக்கும் முடிவு வரப்போகிறது. அங்கு பா.ஜனதா முதல்முறையாக ஆட்சி அமைக்கப்போவது 100 சதவீதம் உறுதி. மக்களின் மனநிலையை பார்த்தால், தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜனதா ஆட்சி அமைக்கும்.

எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்று இப்போதே சொல்ல முடியாது. போகப்போக தெளிவான நிலை உருவாகும். தற்போதைய நிலவரத்தை பார்த்தால், நாங்கள் ஆட்சி அமைப்பது நிச்சயம். அதுபோல், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். அங்கு நாங்கள் தலைமை கட்சி அல்ல. கூட்டணிக்கு அ.தி.மு.க தலைமை தாங்குகிறது.

ஆளும் தி.மு.க.வின் ஊழல், அராஜகம், சனாதன எதிர்ப்பு ஆகியவற்றுக்கு எதிராக மக்கள் மனநிலை காணப்படுகிறது. களத்தை பார்த்தால், தி.மு.க.வுக்கு எதிரான அலை வீசுவது தெளிவாக தெரிகிறது. நான் தமிழ்நாட்டில் பிரசாரம் செய்த அனுபவத்தை வைத்து பார்த்தால், இத்தேர்தலில் தி.மு.க.வுக்கு கணிசமான பின்னடைவு ஏற்படும்.

விஜய் அரசியலுக்கு புதிதாக வந்துள்ளார். ஆனால் புதிதாக ஒருவர் வந்தவுடன் உடனடியாக பெரிய தாக்கத்தை உருவாக்க முடியாது. தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணி மிக வலுவாக உள்ளது. தேர்தலுக்கு பிறகு விஜய்யுடன் கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் எழாது. விஜயுடன் கூட்டணி தேவையில்லை. எங்கள் கூட்டணி கட்சிகள் ஒற்றுமையாக போட்டியிட்டன. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி தனித்தே ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com