

சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தேர்தலுக்கு முன் த.வெ.க.வுடன் கூட்டணி அமைப்பவர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு உண்டு என்று அறிவிக்கப்பட்டிருந்த போதும் யாரும் கூட்டணி அமைக்காத நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான உடன் முதல் கட்சியாக காங்கிரஸ் கட்சி த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்து கூட்டணியை உறுதிப்படுத்தியது.
அதைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் த.வெ.க. கூட்டணியில் இணைந்தன. கடந்த ஒரு சில தினங்களுக்கு முன் ம.தி.மு.க.வும் த.வெ.க. கூட்டணியில் இணைவதாக அறிவித்துள்ளது. அதே நேரம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலர், தங்களது பதவியை ராஜினாமா செய்துகொண்டு த.வெ.க.வில் இணைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில், த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்துள்ள கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து தங்கள் கூட்டணிக்கு நல்ல ஒரு பெயரை சூட்டி, தங்கள் கூட்டணியை வலுப்படுத்தி, 5 ஆண்டுகள் ஆட்சியை இடையூறு இல்லாமல் கொண்டு செல்ல முதல்-அமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளார்.
இதற்காக சென்னையை அடுத்த கோவளத்தில் அமைந்துள்ள 'பிஷர்மேன்ஸ் கோவ் ரிசார்ட்'டில் முதல்-அமைச்சரும், த.வெ.க. தலைவருமான விஜய் தலைமையில் ஆதரவு கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று (புதன்கிழமை) மாலை 4 மணியளவில் நடைபெறுகிறது. இது ஆட்சி அமைந்தபின் த.வெ.க. தலைமையில் நடைபெறும் முதல் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டத்தில், அரசு அமைவதற்கும், ஆட்சி செயல்பாடுகளுக்கும் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தோழமை கட்சித் தலைவர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் தனது நன்றியை நேரில் தெரிவிக்க உள்ளார். மேலும், த.வெ.க. தலைமையில் மாநிலத்தில் ஒரு வலுவான, முறையான மதச்சார்பற்ற கூட்டணியை அதிகாரப்பூர்வமாக கட்டமைப்பது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டு கூட்டணிக்கான பெயர் சூட்டு விழாவும் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
அதற்காக 'மதசார்பற்ற சமூகநீதி கூட்டணி', 'தமிழ்நாடு முற்போக்கு சமூகநீதி கூட்டணி' என்ற பெயர்களும் பரிசீலனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க. மற்றும் ஐ.யூ.எம்.எல். கட்சிகள் பங்கேற்க உள்ளன. த.வெ.க. அரசுக்கு வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு அளிப்பதால், கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று இடதுசாரிகள் அறிவித்துள்ளன.
மேலும் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த கூட்டத்தில், கூட்டணிக்கு என தனியாக ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் செய்யப்படுவதுடன் பொதுவான வழிகாட்டுதல் குழுவும் உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர, வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல்கள், சட்டமன்ற இடைத் தேர்தல்களை கூட்டணி கட்சிகள் இணைந்து எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்த முக்கிய ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும், காவிரி விவகாரம், மேகதாது அணை பிரச்சினை, இருமொழிக் கொள்கை உள்ளிட்ட மாநில உரிமைகள் சார்ந்த முக்கிய பிரச்சினைகளில் கூட்டணி கட்சிகளின் கருத்தையும் கலந்து ஆலோசித்து ஒன்றிணைந்து செயல்படுவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. இது தவிர கூட்டணி கட்சிகளின் விருப்பங்கள் என்னென்ன இருக்கிறது. அவற்றை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சாத்தியக்கூறுகள் என்னவென்றும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.