தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைகழகத்தில் கொரோனா தொற்று குறித்த புதிய பாடப்பிரிவு

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் கொரோனா தொற்று குறித்த புதிய பாடப்பிரிவு உருவாக்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைகழகத்தில் கொரோனா தொற்று குறித்த புதிய பாடப்பிரிவு
Published on

சென்னை,

தமிழக சட்டசபையில் உயர் கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பொறியியல் மற்றும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஆங்கில பாடம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் திறனை மேம்படுத்தும் பயிற்சித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அரசுக் கல்லூரிகளில் புதிதாக பணியமர்த்தப்படும் உதவிப் பேராசிரியர்களுக்கு தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து 4 வாரகால பணிமுன் பயிற்சி வழங்கப்படும்.

ஒரே தரவு மையம்

சென்னை பல்கலைக்கழகத்தில் இயங்கு காணொலி, மின் உள்ளடக்க பாடங்கள், மெய்நிகர் வகுப்புகள், கல்வி பல்லூடக ஆராய்ச்சி மையம், கொரோனா உள்ளிட்ட அதிநவீனநோய்த் தொற்று எதிர்ப்பு ஆராய்ச்சி மையத்தை உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் பல்வேறு பிரிவுகளை ஒரே தரவு மைய செயல்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு ஒரு மின் ஆளுமைத் திட்டம் செயல்படுத்தப்படும்.

வணிகவழி வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள தளங்களில் வல்லுநர்களைக் கொண்டு பயிற்சியாளர்களுக்கும், மாணவர்களுக்கும் பயிற்சி அளிப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அயலகப் பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.

கொரோனா பாடப்பிரிவு

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பாரதியாரின் கையெழுத்துப் பிரதிகள் மற்றும் பத்திரிகைகளில் வெளியான கட்டுரை உள்ளிட்ட அனைத்துப் படைப்புகளையும் ஆவணமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடி தொல்லியல் அகழ்வாய்வுகளால் ஊக்கம் பெற்றுள்ள பல்கலைக்கழகம், மாணவர்களுக்கு வரலாறு, தொல்பொருட்கள், பண்பாடு குறித்த நுட்பங்களை பயிற்றுவிப்பதற்காக தொல்லியல் ஆய்வு மையத்தை நிறுவ முடிவு செய்துள்ளது.

பெரியார் பல்கலைக்கழகத்தில் காலநிலை மாற்றம், அதன் விளைவு மற்றும் அதிலிருந்து மீள்வதற்கான உத்திகள் குறித்த பேரிடர் மேலாண்மை மையம் தொடங்கப்படும். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து புதுவகை கொரோனா வைரஸ் விழிப்புணர்வு, தடுப்பு, தடுப்பூசி போடுதல் மற்றும் வாழ்க்கை சமநிலை என்ற குறுகிய காலப் பாடப்பிரிவைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு புதுமை புத்தாக்கத் திட்டத்தின் கீழ் முதுகலை மாணவர்களுக்கு அடிப்படை அறிவியல் கோடைக்கால பயிற்சித் திட்டம் செயல்படுத்தப்படும். தேர்தெடுக்கப்படும் புதுமை கண்டுபிடிப்புகளுக்கு நிதியுதவியாக ரூ.50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை வழங்கும் திட்டம் இந்த ஆண்டில் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com