மின்சார சேமிப்புக்கு புதிய கொள்கை.. தமிழக அரசு ஒப்புதல்

மின்தேவை குறைவாக இருக்கும் நேரங்களில் கிடைக்கும் உபரி மின்சாரத்தை பேட்டரிகளில் சேமித்து வைத்து, மின்தேவை அதிகமாக இருக்கும் நேரங்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
 தமிழக அரசு
Published on: 

சென்னை,

தமிழகத்தில் சூரியசக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும், உற்பத்தியாகும் மின்சாரத்தை பேட்டரிகளில் சேமித்து தேவைப்படும் நேரங்களில் பயன்படுத்தும் வகையிலும் புதிய திட்டம் கொண்டுவரப்படுகிறது. இதற்காக பல்வேறு சலுகைகளுடன் கூடிய 'தமிழக பேட்டரி ஸ்டோரேஜ் கொள்கைக்கு' தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தில் காற்றாலை மற்றும் சூரியசக்தி மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை அதிக திறன் கொண்ட பேட்டரிகளில் சேமித்து, மின்தேவை அதிகமாக இருக்கும் நேரங்களில் மீண்டும் பயன்படுத்தும் திட்டத்தை ஊக்குவிக்க மின்வாரியம் இந்தக் கொள்கையை உருவாக்கியுள்ளது.இதற்கு நேற்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

2,500 மெகாவாட் இலக்கு

இந்த புதிய கொள்கையின்படி, தினமும் 2,500 மெகாவாட் மின்சாரத்தை பேட்டரிகளில் சேமித்து வைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சேமிக்கப்படும் மின்சாரத்தை தேவைப்படும்போது தொடர்ந்து 4 மணி நேரம் பயன்படுத்தும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

புதிய மின் நிலையங்களுக்கு கட்டுப்பாடு

ஒரு மெகாவாட் மற்றும் அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட தற்போதைய சூரியசக்தி, காற்றாலை மின் திட்டங்களிலும் பேட்டரி கட்டமைப்புகளை ஏற்படுத்த ஊக்குவிக்கப்படும்.புதிதாக அமைக்கப்படும் சூரியசக்தி மின் நிலையங்கள் மற்றும் ஒரே இடத்தில் அமைக்கப்படும் காற்றாலை, சூரியசக்தி மின் திட்டங்களில் உற்பத்தித் திறனில் குறைந்தது 10 சதவீத அளவுக்கு பேட்டரி சேமிப்பு கட்டமைப்பு நிறுவப்பட வேண்டும். இந்த அமைப்பில் சேமிக்கப்படும் மின்சாரத்தை 4 மணி நேரம் வரை பயன்படுத்த முடியும்.

10 ஆண்டுகளுக்கு 100 சதவீத சலுகை

இந்த திட்டத்தின் கீழ் பேட்டரி சேமிப்பு கட்டமைப்புகளை அமைக்கும் தகுதியுள்ள நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.அதன்படி, திட்டம் நிறுவப்பட்ட நாளில் இருந்து 10 ஆண்டுகள் வரை 'டிரான்ஸ்மிஷன் சார்ஜ்' மற்றும் 'வீலிங் சார்ஜ்' கட்டணங்களில் 100 சதவீத விலக்கு அளிக்கப்படும்.மேலும், மின்தேவை குறைவாக இருக்கும் நேரங்களில் கிடைக்கும் உபரி மின்சாரத்தை பேட்டரிகளில் சேமித்து வைத்து, மின்தேவை அதிகமாக இருக்கும் நேரங்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.இதன் மூலம் காற்றாலை மற்றும் சூரியசக்தி மின்சாரத்தை வீணாக்காமல் முழுமையாகப் பயன்படுத்துவதற்கு வழிவகை ஏற்படும்.

X