

சென்னை,
129 அரசு கலைக்கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள். இரண்டாம் நிலை கல்லூரிகளின் முதல்வர்களாகப் பணியாற்ற இணைப் பேராசிரியர்களுக்குப் பதவி உயர்வு அளிப்பதற்கான அரசாணையை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக உயர் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
நீண்ட காலமாக நிரந்தர முதல்வர்கள் இல்லாமல் தவித்து வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு ஒரு முக்கிய நிவாரணமாக, 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான இரண்டாம் நிலை கல்லூரி முதல்வர்களாகப் பதவி உயர்வு பெறுவதற்கான 129 இணைப் பேராசிரியர்கள் அடங்கிய பட்டியலுக்கு உயர்கல்வித்துறை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அரசாணை ஜூலை21 அன்று வெளியிடப்பட்டது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இரண்டாம் நிலை முதல்வர் பணியிடங்களுக்கான 129 காலி இடங்களை அரசு ஏற்கனவே நிர்ணயித்திருந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் முடிவுக்கு உட்பட்டே இந்தப் பட்டியல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கல்லூரிக்கல்வி இயக்குநரின் பரிந்துரைகளின் அடிப்படையில் இப்பதவி உயர்வுக்கான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெறாததால் அதிருப்தி அடைந்தவர்கள், அது குறித்து முறையீடுகளைச் சமர்ப்பிக்க இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அரசாணை குறிப்பிடுகிறது.
நிரந்தர முதல்வர்கள் இல்லாமல் செயல்படும் அரசு கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்த கவலைகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாத இறுதிக்குள் பணி நியமன நடைமுறைகளைத் துறை நிறைவு செய்யும். இந்தப்பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, புதிய கல்வியாண்டு முழுவீச்சில் தொடங்குவதற்கு முன்னதாகவே, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இந்த நியமன நடைமுறை வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பட்டியல் இப்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு மற்றும் பணி இடங்களுக்கான கலந்தாய்வு நடைமுறைகளை நாங்கள் மேற்கொள்வோம்; ஆகஸ்ட் மாத இறுதிக்குள் நிரந்தர முதல்வர்களை நியமிக்கும் பணி நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.