கன்னியாகுமரியில் விரைவில் புதிய தொழில்நுட்ப பூங்கா: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

கன்னியாகுமரியில் அகஸ்தீஸ்வரம், வடக்குதாமரைகுளம், நாகர்கோவில் மாநகராட்சியில் அனாதைமடம் திடல் பகுதிகளை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரியில் விரைவில் புதிய தொழில்நுட்ப பூங்கா: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
Published on

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், வடக்குதாமரைகுளம் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட அனாதைமடம் திடல் பகுதிகளை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, மாவட்ட கலெக்டர் அழகுமீனா தலைமையில் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் மற்றும் வேலைவாய்ப்பற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கும் வகையிலும், மாவட்டம் முழு வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிக்கும் தமிழ்நாடு அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை ஒரு பெரிய தொழில் நிறுவனங்கள் மூலம் மக்களுக்கு அதிக வேலை வாய்ப்பு வரும் சூழல் இல்லாமல் இருந்தது. அதனை சரி செய்ய வேண்டும் என்பதற்காகவும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் 2025-2026-ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் தொழில்துறை சார்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் சிப்காட் தொழில்போட்டை மற்றும் மினி தொழில் பூங்கா அமைக்கப்படுமென அறிவித்தார்கள்.

அதன் ஒருபகுதியாக இன்று அகஸ்தீஸ்வரம் வட்டம், வடக்கு தாமரைக்குளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 32 ஏக்கர் பரப்பளவில் புதிதாக அமைக்கப்பட உள்ள சிப்காட் தொழில்பேட்டைக்கான இடத்தினை புத்தளம் பேரூராட்சி மணவாளபுரம் பகுதியிலுள்ள படகு தளத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் இடத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு, தொழில்பேட்டை அமைவதற்கான சாத்திய கூறுகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.

தொடர்ந்து தென்தாமரைக்குளம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் மூலதன மானிய நிதியின் கீழ் ரூ.0.97 கோடி மதிப்பில் வளமீட்பு பூங்கா செல்லும் சாலையில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி, கலைஞர் நகர்புற மேம்பாடுத்திட்டத்தின்கீழ் ரூ.1.76 கோடி மதிப்பில் மணக்குடி ஏரியிலிருந்து திடக்கழிவு மேலாண்மை திட்டம் நடைபெறும் இடம் வரையில் சிறுபாலம் அமைக்கும் பணி, சிறப்பு நிதியின்கீழ் ரூ.0.70 கோடி மதிப்பில் 12-வது வார்டு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை, சாலையில் கருந்தளம் அமைத்தல் என மொத்தம் ரூ.3.43 கோடி மதிப்பில் சாலை மற்றும் மேம்பாலம் அமைக்கப்படவுள்ள இடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட அனாதை மடம் திடலில் சுற்றுச் சூழல் பாதிக்காத வகையில் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான இடம் ஆய்வு செய்யப்பட்டது. சுற்றுலா சார்ந்த தொழில் வளர்ச்சிக்கும் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும். இதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உருவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேற்சொன்ன ஆய்வுகளின்போது தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவர் சுரேஷ்ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி, உதவி இயக்குநர்கள் ராமலிங்கம் (பேரூராட்சிகள்), கணேசன் (நிலஅளவை), தீபா (மீன்வளத்துறை), செயற்பொறியாளர்கள் பாரதி (மாசு கட்டுப்பாட்டுத்துறை), அழகியநம்பி (தொழில் பூங்கா - திருநெல்வேலி), சிப்காட் திட்ட அலுவலர் மாரிமுத்து, மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், உதவி சுற்றுலா அலுவலர் சதீஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டார்கள். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com