சுங்கக்கட்டண புதிய விதிகள் இரட்டை பகற்கொள்ளை அறிவிப்பாகும்: எஸ்டிபிஐ கட்சி கண்டனம்

புதிய விதிகள் சுங்கச்சாவடியில் இருந்து குறைந்த தொலைவில் உள்ள வாகன ஓட்டிகளை மிகவும் பாதிக்கும் என்று எஸ்டிபிஐ கட்சி தெரிவித்துள்ளது.
சுங்கக்கட்டண புதிய விதிகள் இரட்டை பகற்கொள்ளை அறிவிப்பாகும்: எஸ்டிபிஐ கட்சி கண்டனம்
Published on

சென்னை,

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் மூலமாக, வாகனங்களிடமிருந்து பகற்கொள்ளை நடத்தப்பட்டுவரும் வேளையில், தற்போது சுங்கக் கட்டணம் செலுத்தும் பாஸ்ட் டேக் முறையில் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய விதிகள் இரட்டை பகற்கொள்ளை அறிவிப்பாக உள்ளது.

சுங்கச்சாவடிக்கு செல்வதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பே பாஸ்ட் டேக் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்றும், சுங்கச்சாவடிக்கு போகும் வழியில் அல்லது சுங்கச்சாவடிக்கு அருகே ரீசார்ஜ் செய்தாலோ அது ஏற்றுக்கொள்ளப்படாது எனவும், அதற்கு இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இந்த விதிகள் மிகவும் மோசமானவை.

இந்த விதிகள், வாகன உரிமையாளர்களிடமிருந்து முன்கூட்டியே பணத்தைப் பறிக்கும் பகற்கொள்ளை நடைமுறையாகும். இந்த புதிய விதிகள் சுங்கச்சாவடியில் இருந்து குறைந்த தொலைவில் உள்ள வாகன ஓட்டிகளை மிகவும் பாதிக்கும். அவசர தேவைக்குக்கூட வாகனங்களை கொண்டு செல்பவர்களிடமிருந்து இரு மடங்கு கொள்ளை அடிக்கும் விதிகளாகும்.

புதிதாக வாகனம் வாங்கும் பொழுதே சாலைவரி உள்ளிட்ட வரிகளை செலுத்திய பிறகு, மீண்டும் சாலைகள் பயன்பாட்டுக்காக சுங்கக் கட்டணம் என்கிற பெயரில், மக்களிடமிருந்து கொள்ளை அடிக்கும் சுங்கக்கட்டண முறையை ரத்து செய்திட வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துவரும் நிலையில், தற்பொழுது அந்தப் பகற்கொள்ளைக்காக முன்கூட்டியே மக்களிடமிருந்து பணத்தைப் பறிப்பது என்பது கண்டனத்திற்குரியது.

ஏற்கனவே ஜிஎஸ்டி மற்றும் வரைமுறை அற்ற சுங்கக்கட்டண உயர்வு காரணமாக ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு, மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், புதிய பாஸ்ட் டேக் விதிகள் கூடுதல் சுமையை உருவாக்கும்.

ஆகவே, புதிய பாஸ்ட் டேக் விதிகளை ரத்து செய்வதோடு, சுங்கச்சாவடி முறையையும் விரைவில் ரத்து செய்திட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com