பைக் மீது லாரி மோதிய விபத்தில் புதுமண தம்பதி பலி: திருமணமான ஒரே மாதத்தில் சோகம்

விருதுநகரைச் சேர்ந்த புதுமணத் தம்பதி சென்ற பைக், கோவில்பட்டி-சாத்தூர் சாலையில் சென்றபோது, எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக அந்த பைக் மீது பலமாக மோதியது.
பைக் மீது லாரி மோதிய விபத்தில் புதுமண தம்பதி பலி: திருமணமான ஒரே மாதத்தில் சோகம்
Published on

தூத்துக்குடி,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் மனோகரன் (வயது 32). தொழிலாளியான இவருக்கும், இவரது உறவினரான மனிஷா(20) என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி திருமணம் நடைபெற்றது.

புதுமணத் தம்பதி இருவரும் கடந்த 8ம் தேதி இரவு கோவில்பட்டிக்கு வந்துவிட்டு, மீண்டும் தங்களது ஊருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். கோவில்பட்டி-சாத்தூர் சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக இவர்களது பைக் மீது பலமாக மோதியது.

இந்தக் கோர விபத்தில் மனோகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த மனிஷாவை மீட்ட பொதுமக்கள், சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனிஷா, நேற்று முன்தினம் காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருமணம் முடிந்து இன்னும் ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது.

இந்த விபத்து குறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டைச் சேர்ந்த அபூபக்கர்(31) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான சில நாட்களிலேயே புதுமணத் தம்பதி 2 பேரும் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கஞ்சம்பட்டி கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com