திருமணமான 7 மாதத்தில் புதுப்பெண் மர்ம சாவு - அடித்து கொன்றதாக பெற்றோர் புகார்

வரதட்சணை கேட்டு மாமியார், கணவர் கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருவண்ணாமலை,

காஞ்சிபுரத்தை அடுத்த புத்தளி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாதன். இவரது மகள் ஜீவலட்சுமி (19 வயது). இவருக்கும், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை அடுத்த ஆக்கூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் ஜீவானந்தம் (22 வயது) என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இதனையடுத்து தம்பதி இருவரும் ஆக்கூர் கிராமத்தில் வசித்து வந்தனர். இந்த நிலையில் ஜீவலட்சுமியிடம் வரதட்சணை கேட்டு மாமியார் கங்கா, கணவர் ஜீவானந்தம் ஆகியோர் கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜீவலட்சுமி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து கங்கா, ஜீவலட்சுமியின் தாயாருக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரது பெற்றோர் ஆக்கூர் கிராமத்திற்கு சென்று, மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்து ஜீவலட்சுமியின் பெற்றோர் போலீசில் கொடுத்துள்ள புகாரில், தனது மகளின் முகம், கழுத்து, நெற்றி உள்ளிட்ட இடங்களில் காயம் உள்ளது. இதனால் அவரை அடித்துக் கொலை செய்து இருக்கலாம் என்று கூறியுள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மர்மமான முறையில் இறந்த ஜீவலட்சுமிக்கு திருமணமாகி 7 மாதங்களே ஆவதால் உதவி கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com