மதுரை விமான நிலையத்தில் இன்று முதல் இரவு நேர விமான சேவை

மதுரை விமான நிலையத்தில் இரவு நேர விமான சேவை இன்று முதல் தொடங்குகிறது.
மதுரை விமான நிலையத்தில் இன்று முதல் இரவு நேர விமான சேவை
Published on

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, ஐதராபாத் உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கும், இலங்கை, துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, மதுரை விமான நிலையத்தில், காலை 8.10 மணி முதல் இரவு 9.05 மணி வரை விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அவ்வாறு இயங்காமல் பகல் நேரங்களில் மட்டுமே விமான சேவை இருந்து வந்தது. இதனால், மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றி, 24 மணி நேரமும் செயல்பட வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.

அதன் பலனாக, கடந்த அக்டோபர் மாதம் 1-ந்தேதி முதல், மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிப்பு வெளியானது. இதனைதொடர்ந்து, இரவு நேரங்களில் விமானங்கள் இயக்குவது தொடர்பாக பல்வேறு விமான நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் மதுரையில் இருந்து சென்னை வழியாக மலேசியாவின் பினாங்கு நகருக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் புதிய விமான சேவை தொடங்கப்பட இருக்கிறது.

இதுகுறித்து விமான நிலைய இயக்குனர் கூறியதாவது:-

அக்டோபர் 1-ந்தேதி முதல் 24 மணி நேரமும் மதுரை விமான நிலையம் செயல்படும் என்ற அறிவிப்பு வெளிவந்ததில் இருந்து அதற்கான அனைத்து பணிகளும் செய்யப்பட்டன. அன்றைய தினத்தில் இருந்து 24 மணி நேரமும் விமான நிலையம் செயல்பட பணியாளர்களை நியமித்து இருக்கிறோம்.

கடந்த காலங்களில் காலை 6 மணி முதல் 2 மணி வரை, மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை என்ற 2 சுழற்சி முறையில் பணிகள் ஒதுக்கப்பட்டன. தற்போது இரவு நேர விமான பயணிகளை கையாளும் வகையில், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை 3-வது சுழற்சியாக பணியாளர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் விமான அதிகாரிகள், பணியாளர்கள், விமான நிறுவன பணியாளர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உள்ளிட்டோர் அடங்குவர்.

இன்று முதல் மதுரை விமான நிலையத்தில் இருந்து இரவு நேர விமான சேவை தொடங்க இருக்கிறது. அதன்படி, தனியார் விமானம் இரவு 9 மணிக்கு சென்னையில் புறப்பட்டு, இரவு 10.25 மணிக்கு மதுரை வந்தடைகிறது. அதன்பின்னர், மறுமார்க்கமாக இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு இரவு 12.05 மணிக்கு சென்னை சென்றடைகிறது.

அதன்பின்னர் அங்கிருந்து பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னர் மலேசியாவின் பினாங்கு நகருக்கு செல்கிறது. இதுபோல், இரவு நேரங்களில் விமானங்கள் இயக்குவது தொடர்பாக, விமான நிறுவனங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. வரும் காலங்களில் இரவு நேரங்களில் முழுமையாக விமானங்கள் இயக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com