இரவு நேர ஊரடங்கு; வெளியே சுற்றுவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் - காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்

இரவு நேர ஊரடங்கின் போது வெளியே சுற்றுவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இரவு நேர ஊரடங்கு; வெளியே சுற்றுவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் - காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்
Published on

சென்னை,

கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட இருக்கிறது. இந்த ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமலில் இருக்கும். இந்த நேரத்தில், அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து, வாடகை கார், ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களுக்கான பஸ் போக்குவரத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரவு நேர ஊரடங்கு குறித்து சென்னை மாநகரக் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் பேசியதாவது:-

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் இரவு ஊரடங்கு நடைமுறைக்கு வர உள்ளது. ஊரடங்கு கண்காணிப்புப் பணியில் 2 ஆயிரம் காவலர்காள் ஈடுபடுவார்கள்.

சென்னையில் 200 இடங்களில் காவல் துறையினர் வாகனச் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முக்கியச் சாலைகளில் காவல் துறை வாகனச் சோதனை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளோம். மேம்பாலங்கள் மூடப்படும். இரவு 10 மணிக்கு வாகன சோதனைகளைத் தொடங்கி விடுவோம். அதையும் மீறி வெளியே வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உள்ளோம். உத்தரவை மீறி வருபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அன்று திருமண நிகழ்ச்சிகளுக்குச் செல்பவர்கள் திருமண அழைப்பிதழை வைத்திருந்தால் போதும். காவல் துறையினரிடம் காட்டினால் அனுமதிக்கப்படுவார்கள். ரயில் நிலையங்கள், விமான நிலையம் செல்பவர்கள் பயண டிக்கெட் காட்டினாலே போதும். காவல் துறை அனுமதிப்பார்கள். சென்னை மக்கள் இரவு முழு ஊரடங்கிற்கும் முழு ஊரடங்கிற்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பத்திரிகைகள், ஊடகங்களுக்கு எந்தவித கட்டுபாடுகளும் இல்லை என்று கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com