

சென்னை,
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
நீலகிரி மாவட்டம் இந்த ஆண்டு பல காரணங்களால் மிகக் கடினமான காட்டுத்தீ காலத்தை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் வென்லாக் டவுன்ஸ் காப்புக் காட்டில் ஏற்பட்ட காட்டுத்தீ மிக வேகமாக பரவியது. அதிக வெப்பநிலை, குறைந்த ஈரப்பதம் மற்றும் பலத்த காற்று ஆகியவை இணைந்து உலர்ந்த தாவரங்களை எளிதில் எரியக்கூடிய எரிபொருளாக மாற்றி தீயின் தீவிரத்தைக் அதிகரித்தன.
அதிக வெப்பம் மற்றும் குறைந்த ஈரப்பதம் காரணமாக உலர்தன்மை அதிகரித்து தீ எளிதில் பற்றிக்கொண்டு வேகமாக பரவியது. மேலும் பலத்த காற்று தீக்கனல்களை முன்புறம் கொண்டு சென்று தீ பரவலை அதிகரித்தது. நீலகிரியின் மலைப்பாங்கான நில அமைப்பும் தீயணைப்பு பணிகளில் சவால்களை ஏற்படுத்தியது. சரிவுகள் மற்றும் கணிக்க முடியாத காற்று திசைகள் தீ கட்டுப்பாட்டை கடினமாக்கின.
15.04.2026 அன்று பார்சன்ஸ் வேலி சரகத்தின் வென்லாக் டவுன்ஸ் காப்புக் காட்டில் காட்டுத்தீ ஏற்பட்டதாக தகவல் கிடைத்ததும் உள்ளூர் வனத்துறை குழுக்கள் உடனடியாக பணியில் ஈடுபட்டன. மாநிலம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட வனத்துறை பணியாளர்கள் மற்றும் 6 மாவட்ட வன அலுவலர்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். மேலும் 7 மாநில வனத்துறை தீயணைப்பு வாகனங்கள் முக்கிய இடங்களில் நிலைநிறுத்தப்பட்டன. தமிழக மாநில பேரிடர் மீட்பு படையிலிருந்து 60 பேர் கொண்ட இரு அணிகள் மற்றும் தீயணைப்பு துறையினரும் பணியில் ஈடுபட்டனர். மேலும் 100-க்கும் மேற்பட்ட உள்ளூர் சூழல் மேம்பாட்டு குழு உறுப்பினர்கள் உதவி செய்தனர். தீ மிகுந்த தீவிரம் கொண்டிருந்ததால் வான்வழி உதவி கோரப்பட்டது.
நிலைமைக்கிணங்க மாவட்ட வன அலுவலர் கோரிக்கையின் பேரில் மாவட்ட ஆட்சியர் மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பின் மூலம் ஹெலிகாப்டர் உதவியை கோரினார். சூலூரிலிருந்து 25.04.2026 அன்று வந்த விமானப்படை குழு ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் தெளித்து தீயை கட்டுப்படுத்த உதவியது. பின்னர் வானிலை உகந்ததாக இல்லாததால் ஹெலிகாப்டர் பயன்பாடு நிறுத்தப்பட்டது.
இந்த தீ பெரும்பாலும் தரை மட்டத்தில் பரவிய தீயாகும். செஸ்ட்ரம், யூலெக்ஸ், ஸ்காட்ச் ப்ரூம் மற்றும் உலர்ந்த வாட்டில் போன்ற அந்நிய களைகள் தீ பரவலுக்கு காரணமாக இருந்தன. மனித குடியிருப்புகள் எதுவும் பாதிக்கப்படவில்லை, சோலா காடுகளில் தீ ஏற்படவில்லை. தீ பரவலை கட்டுப்படுத்த தீ தடுப்பு கோடுகள் அமைத்தல், அகழிகள் தோண்டுதல், மோட்டார் பம்புகள் பயன்பாடு, நவீன தீயணைப்பு வாகனங்கள் மற்றும் கைமுறை தீயணைப்பும் பயன்படுத்தப்பட்டன.
மாநில தலைமையகமான சென்னை நகரில் மாநில வனத்தீ கட்டுப்பாட்டு மையம் செயல்படுகிறது. 2022–23ம் ஆண்டில் நபார்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தகவல் தொழில்நுட்ப வசதிகளுடன் மாவட்ட வனத்தீ கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் உள்ள வென்லாக் டவுன்ஸிலும் இது செயல்படுகிறது. இந்த மையங்கள் 24 மணி நேரமும் தீ எச்சரிக்கைகளை கண்காணித்து உடனடியாக களப்பணியாளர்களுக்கு தகவல்களை வழங்குகின்றன.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் நவீன தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த தீயணைப்பு பணியில் நீலகிரி வனப்பிரிவில் 7 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.
சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் சிறப்புச் செயலாளர் ஆகியோர் 27.04.2026 அன்று களப்பகுதிகளை ஆய்வு செய்தனர். தற்போது தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மீண்டும் காட்டுத்தீ பரவாமல் தடுக்க களப்பணியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தலைமைச் செயலாளர் மற்றும் மூத்த அதிகாரிகளால் நீலகிரி காட்டுத்தீ நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.