

நீலகிரி,
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில், குடியிருப்பு மற்றும் கடைகள் நிறைந்த வீதியில் சிறுத்தை ஒன்று சாதாரணமாக உலா வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களிடையே பரப்பரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக கரடி, சிறுத்தை, யானை போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நேரத்தில் மஞ்சூர் பஜார் வீதிக்குள் சிறுத்தை ஒன்று நுழைந்துள்ளது.
மக்கள் நடமாட்டம் இல்லாத அந்த நேரத்தில், சாலையில் எந்தவித அச்சமுமின்றி அந்த சிறுத்தை சாதாரணமாக உலா வந்துள்ளது. இரை தேடி வந்த அந்த சிறுத்தை, அங்குள்ள கடைகளின் முன்புறம் மற்றும் குடியிருப்பு பகுதிகளை ஒட்டியுள்ள சாலைகளில் நீண்ட நேரம் சுற்றித் திரிந்துள்ளது.
காலையில் கடை உரிமையாளர்கள் தங்களது கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, சிறுத்தை உலா வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
அதிமுக மற்றும் பிற உள்ளூர் அமைப்புகள் உட்பட அப்பகுதி பொதுமக்கள், குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து செல்லப்பிராணிகளை வேட்டையாடி வரும் இந்த சிறுத்தையை வனத்துறையினர் உடனடியாக கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இரவு நேரங்களில் பொதுமக்கள் தனியாக நடமாட வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.