நீலகிரி: சிறுத்தை தாக்கி 3 வயது சிறுமி பலி

சிறுத்தையின் தொடர் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி நீலகிரி சுற்றுவட்டார கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நீலகிரி: சிறுத்தை தாக்கி 3 வயது சிறுமி பலி
Published on

நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. அவை ஊருக்குள் புகுந்து கால்நடைகளை கொன்று வருவதோடு மனிதர்களையும் தாக்கி வருகிறது. கடந்த சில நாட்களில் மட்டும் சிறுமி உள்பட 4 பேரை சிறுத்தை தாக்கி இருந்தது. அதில் படுகாயம் அடைந்த ஏலமன்னாவை சேர்ந்த சரிதா என்பவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் எதிரொலியாக மனிதர்களை தாக்கும் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க உத்தரவிடப்பட்டது. மேலும் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் மேற்பார்வையில் 25 குழுக்கள் அமைக்கப்பட்டு சிறுத்தையை தேடும் பணி நடைபெற்று வந்தது. அதோடு 6 இடங்களில் கூண்டுகளும் வைக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று பந்தலூர் அருகே உள்ள தொண்டியாளம் பகுதியில் சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையின் ஒரு குழு ஈடுபட்டது. அப்போது திடீரென எங்கிருந்தோ பெண்களின் அலறல் சத்தம் கேட்டது. உடனே சத்தம் வந்த திசைக்கு வனத்துறையினர் ஓடினர். அப்போது அங்கிருந்த பெண்கள், தேயிலை செடிகளுக்குள் பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று குழந்தையை கவ்வி இழுத்து சென்று விட்டதாக கூறினர். உடனே வனத்துறையினர் தேயிலை செடிகளை விலக்கி தேடியபோது அங்கு கழுத்து பகுதியில் பலத்த காயங்களுடன் ஒரு சிறுமி உயிருக்கு போராடி கொண்டு இருந்தாள். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர், அவளை தோளில் தூக்கிக்கொண்டு, பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் சிறிது நேரத்திலேயே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். இதை அறிந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உடனே தேவாலா போலீசார் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில் அந்த சிறுமி, மேங்கோரேஞ்ச் தனியார் எஸ்டேட்டில் பணிபுரியும் வடமாநிலத்தை சேர்ந்த சிவசங்கர் கர்வா, மிலாந்தி தேவி தம்பதியின் மகள் நான்சி(வயது 3) என தெரியவந்தது. அவள், தொண்டியாளம் அங்கன்வாடி மையத்தின் முன்பு சக குழந்தைகளுடன் விளையாடி கொண்டு இருந்தபோது, அருகில் உள்ள தேயிலை தோட்டத்தில் இருந்து சிறுத்தை பாய்ந்து வந்து, அவளை கவ்விச்சென்றது தெரியவந்தது.

இதற்கிடையில் சிறுத்தையின் தொடர் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி சுற்றுவட்டார கிராம மக்கள் பந்தலூர் பஜார், தேவாலா பஜார், மேங்கோரேஞ்ச் பிரிவு ஆகிய 3 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஆங்காங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், பொதுமக்கள் சமாதானம் அடையவில்லை. இந்த சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com