நீலகிரி; அணை கால்வாயில் தவறி விழுந்து புலி குட்டி சாவு!

பெண் புலிக்குட்டி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் வனத்துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி; அணை கால்வாயில் தவறி விழுந்து புலி குட்டி சாவு!
Published on

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் மசினகுடி வனச்சரகத்துக்கு உட்பட்ட அவரெல்லா பிரிவு மாயாறு காப்புக்காட்டில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாயாறு அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் கால்வாய் பகுதியில் பெண் புலிக்குட்டி ஒன்று இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, வனச்சரகர் ஜெயராஜ் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கால்வாயில் மிதந்து கொண்டிருந்த புலிக்குட்டியின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கயிறு கட்டி வன ஊழியர் ஒருவர் கால்வாயில் இறங்கி புலிக்குட்டியின் உடலை மீட்டார்.

தொடர்ந்து தேசிய புலிகள் காப்பக ஆணைய நெறிமுறைகளின்படி முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் கிருபா சங்கர் தலைமையில், உதவி வன கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் புலிக்குட்டியின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.

அப்போது அதன் உடலுக்குள் தண்ணீர் நிரம்பியிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், இரவு நேரத்தில் தண்ணீர் குடிக்க வந்த புலிக்குட்டி அணை கால்வாயில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com