

சென்னை,
டெங்கு பாதிப்பால் 9 உயிர்கள் பறிபோன நிலையில், தவெக அரசு மெத்தனத்தைக் கைவிட்டுப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதும், இதுவரை 15,933-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியும் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் 70 முதல் 100 பேர் வரை பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வரும் இந்த இக்கட்டான சூழல், பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
காலநிலை மாற்றத்தால் கொசுக்கள் பெருகும் எனத் தெரிந்திருந்தும், தவெக அரசின் சுகாதாரத் துறை உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் 9 பேர் உயிரிழக்கும் அளவுக்கு மெத்தனமாகச் செயல்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பாதிப்புகள் தீவிரமடைந்த பின் கண்துடைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாமல், ஆரம்பத்திலேயே கொசு ஒழிப்பு மற்றும் சுகாதாரப் பணிகளை முடுக்கிவிட்டிருந்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதையும் இந்த உயிரிழப்புகளையும் தடுத்திருக்க முடியும்.
எனவே, இனியாவது விஜய் அரசு தனது மெத்தனப் போக்கைக் கைவிட்டு, போர்க்கால அடிப்படையில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மாவட்ட மருத்துவமனைகளிலும் போதிய படுக்கைகள், மருந்துகள், ரத்தத் தட்டணுக்கள் (platelets) இருப்பு மற்றும் மருத்துவர்கள் பணியில் இருப்பதை 24 மணி நேரமும் உறுதி செய்ய வேண்டும். மேலும், தமிழகம் முழுவதும் வீடு வீடாகக் கொசு ஒழிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தி, தொடர் மருத்துவ முகாம்களை நடத்தி மக்களின், குறிப்பாகக் குழந்தைகளின் உயிரைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.