

மன்னார்குடியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் உள்ளாட்சி தேர்தலில் வி த லீடர்ஸ் அமைப்பு போட்டியிடும் என்று கூறினார். இது தொடர்பாக அண்ணாமலை கூறியதாவது: இதே மன்னார்குடிக்கு தற்போதைய எம்.எல்.ஏ.வை வெற்றிபெறச் செய்ய வந்தேன். அதுபோலத்தான் தாராபுரத்திலும் சென்று வீதி வீதியாகச் சென்று பிரச்சாரம் செய்தேன்.
பாதம் தொட்டு வணங்கி வாக்கு சேகரித்தேன். தற்போது அந்த எம்.எல்.ஏ.க்கள் வெற்றிபெற்ற பின்னர் அந்த கட்சியிலேயே இல்லை. இந்த தொகுதியில் டி.ஆர்.பி. ராஜா 100 ஆண்டுகளுக்குத் தேவையான திட்டங்களை வேலை செய்துள்ளார் என்றும், தனக்கு முன்பே தெரிந்திருந்தால் நான் தேர்தலிலேயே நின்றிருக்க மாட்டேன் எனக்கு தெரியாம போய்விட்டது எனவும் தெரிவித்து மக்கள் கையில் இருக்கும் மை காய்வதற்குள் வேஷ்டி மாற்றியாகிவிட்டது. இத்தகைய அரசியலை உடைக்க வேண்டும்.
இதுபோன்ற ஒரு மோசமான அரசியலுக்குள் நாமும் போகக்கூடாது. இதனால் மக்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை. அடிப்படைப் பிரச்சனைகள் எழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தலைவர்களாக உருவாகின்றவர்கள் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீராதாரங்களைச் சுத்தப்படுத்துவதில் தொடங்கி, மரம் நடவைத்து அவற்றை பேணிக்காத்து அடுத்த தலைமுறைக்கும் கொடுக்க வேண்டும், மக்களோடு மக்களாக கீழிறங்கி பணியாற்ற வேண்டும். என்கின்ற ஒற்றைக் கருத்தில் வீ த லீடர்ஸ் சமூகப்பணி நடைபெற்று வருகின்றது. இதுபோன்ற ஒரு அரசியல் கட்சி வேண்டும் இதற்காகத்தான் நாம் காத்திருந்தோம் என மக்கள் நினைக்க வேண்டும். 234 தொகுதியிலும், உள்ளாட்சிகளிலும் தலைவர்களை உருவாக்க வேண்டும், உள்ளாட்சித் தேர்தலில் வீ த லீடர்ஸ் அமைப்பு பங்கு பெறும்’ என்று கூறினார்.
வி த லீடர்ஸ் அமைப்பு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் என்று அண்ணாமலை அறிவித்த நிலையில், தனித்து களமிறங்குமா? அல்லது கூட்டணி அமைத்து களமிறங்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.