கடற்பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகள் அமைக்க அனுமதி மறுக்க வேண்டும் - எஸ்டிபிஐ வலியுறுத்தல்

எண்ணெய் மற்றும் எரிவாயுவை உறிஞ்சும்போது நிலத்தடி நீரும் உறிஞ்சப்பட்டு நிலமட்டம் தாழ்ந்துபோகும் ஆபத்து உள்ளது என்று நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்
நெல்லை முபாரக்
Published on

சென்னை,

மயிலாடுதுறை கடற்பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகள் அமைக்க அனுமதி மறுக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல். இது தொடர்பாக, எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தனியார் நிறுவனம்

மயிலாடுதுறைக்கு கிழக்கே வங்கக்கடலில் 81 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ‘ஹார்டி எக்ஸ்ப்ளோரேஷன் அண்ட் புரொடக்‌ஷன் இந்தியா’ என்ற தனியார் நிறுவனம் 5 புதிய எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகளை அமைக்க மத்திய அரசிடம் சுற்றுச்சூழல் மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி கோரியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மீனவர்களை வஞ்சிக்கும் செயல்

ஏற்கனவே தமிழக கடற்கரையில் வேதாந்தா மற்றும் ஓஎன்ஜிசி ஆகிய நிறுவனங்களுக்கு பல்லாயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்பளவு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது மயிலாடுதுறை கடற்பரப்பிலும் கிணறுகள் அமைக்க முயல்வது மீனவர்களை வஞ்சிக்கும் செயலாகும்.

மீனவ குடும்பங்களின் உயிர்நாடி

கடல் என்பது வெறும் கச்சா எண்ணெய் எடுக்கும் களம் அல்ல; அது லட்சக்கணக்கான மீனவ குடும்பங்களின் உயிர்நாடியாகும். கடலுக்குள் தொடர்ந்து கிணறுகள் தோண்டுவதால் கடல் சூழலியல், பவளப்பாறைகள் மற்றும் மீன்வளம் கடுமையாக பாதிக்கப்பட்டு, மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கவே முடியாத சூழல் உருவாகும்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள காவிரி பாசன மாவட்டங்களின் சூழலை கெடுக்கும் நோக்கில், அதன் எல்லைக்கு மிக அருகில் இத்திட்டத்தை செயல்படுத்த எண்ணெய் நிறுவனங்கள் சதி செய்கின்றன.

பேரபாயம் ஏற்படும்

எண்ணெய் மற்றும் எரிவாயுவை உறிஞ்சும்போது நிலத்தடி நீரும் உறிஞ்சப்பட்டு நிலமட்டம் தாழ்ந்துபோகும் ஆபத்து உள்ளது. தற்போது கடல் மட்டத்திற்கும் காவிரி படுகையின் நிலமட்டத்திற்கும் இடையே வெறும் 1 மீட்டர் மட்டுமே வேறுபாடு உள்ள நிலையில், இத்தகைய ஆய்வுகளால் வரும் காலத்தில் காவிரி படுகையின் பெரும்பகுதியே கடலுக்குள் காணாமல் போகும் பேரபாயம் ஏற்படும்.

எனவே, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கோரப்பட்டுள்ள இந்த அனுமதி விண்ணப்பத்தை நிராகரிக்க தேவையான உறுதியான அழுத்தத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை ஆணையத்திடம் இந்நிறுவனம் அனுமதி கோரும்போது, அந்த விண்ணப்பத்தை ஆணையம் உடனடியாக நிராகரிக்க வேண்டும். தமிழக அரசு இத்திட்டத்திற்கு எவ்வித இசைவும் தராமல், கடல் சூழலியலையும் மீனவர்-விவசாயிகளின் வாழ்வுரிமையையும் பாதுகாக்க உடனடியாக தலையிட்டு இத்திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com