

சென்னை,
இறைவன் முன் அனைத்து உயிர்களும் சமம் என்பதால், வழிபாட்டு தலங்களில் யாருக்கும் பாகுபாடு காட்ட இடமில்லை என்று சென்னை ஐகோர்ட்டு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள மணவாள மாமுனிகள் சன்னதியில், பிராமணர் அல்லாத தென்கலை வைணவ பக்தர்களுக்கு தீர்த்தம், பிரசாதம் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக மாதவன் ராமானுஜ தாசன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
மேலும், பிராமணர் அல்லாத பக்தர்கள் மணவாள மாமுனிகள் சன்னதியில் பிரதான வாசல் வழியாக அனுமதிக்கப்படாமல் பக்கவாட்டு வாசல் வழியே அனுப்பப்படுவதாகவும், நாலாயிர திவ்யப்பிரபந்தம் பாட அனுமதி மறுக்கப்படுவதாகவும் மனுதாரார் குறிப்பிட்டார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோவில் நிர்வாகம் தரப்பில், "சன்னதிகள் மிகக்குறுகிய இடவசதி கொண்டதாக இருப்பதால் பொது பக்தர்கள் சன்னதிக்கு வெளியே நிறுத்தப்படுகிறார்களே தவிர, இதில் எந்தவித சாதிப்பாகுபாடும் இல்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
குறிப்பிட்ட காலங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் பொது பக்தர்கள் சன்னதிகளில் திவ்யப்பிரபந்தம் பாடி இறைவனை வழிபட எந்த தடையும் இல்லை எனவும், கோவிலில் தீர்த்தம், பிரசாதம் வழங்குவதில் அனைத்து பக்தர்களும் சமமாக நடத்தப்படுவார்கள், எவ்வித பாகுபாடும் காட்டப்படாது என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இந்த உத்தரவாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், "இறைவனின் பார்வையில் அனைத்து உயிர்களும் சமமானவர்கள், இறைவன் யாரிடமும் பாகுபாடு காட்டுவதில்லை என்ற பகவத் கீதையின் வாசகத்தை சுட்டிக்காட்டி வழிபாட்டு தலங்களில் யாருக்கும் பாகுபாடு காட்ட இடமில்லை” என திட்டவட்டமாக தெரிவித்தனர். பின்னர் கோவில் நிர்வாகம் அளித்த உத்தரவாதத்தை உறுதியாக பின்பற்றி செயல்பட உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.