சூரப்பா மீதான விசாரணை அறிக்கை மீது எந்த இறுதி முடிவும் எடுக்க கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை அறிக்கை மீது மார்ச் 15 வரை எந்த இறுதி முடிவும் எடுக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சூரப்பா மீதான விசாரணை அறிக்கை மீது எந்த இறுதி முடிவும் எடுக்க கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Published on

சென்னை,

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான ஆணையத்தை தமிழக அரசு கடந்த நவம்பர் மாதம் நியமனம் செய்தது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதிபதி கலையரசன் தலைமையிலான ஆணையம் தற்போது விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையில் விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்க கோரி துணைவேந்தர் சூரப்பா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது சூரப்பா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2018 ஆம் ஆண்டு துணை வேந்தராக நியமிக்கப்பட்டதில் இருந்து 2020 வரை எந்த சிக்கலும் ஏற்படவில்லை என்றும், தமிழக அரசு பொறியியல் மாணவர்களுக்கான அரியர் தேர்வுகளை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தது, அண்ணா பல்கலைக்கழகத்தை சீர்மிகு உயர்கல்வி நிறுவனமாக அறிவிப்பதற்கான முயற்சி ஆகியவற்றில் அரசுடன் ஏற்பட்ட கருத்து வேற்பாடுகள் காரணமாக சூரப்பா மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.

இதையடுத்து அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், மனுதாரர் கூறுவது போல அரியர் தேர்வு விவகாரம், அண்ணா பல்கலைக்கழகத்தை சீர்மிகு உயர்கல்வி நிறுவனமாக அறிவிப்பதற்கான முயற்சி ஆகியவற்றின் காரணமாக சூரப்பா மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று விளக்கமளித்தார். மேலும் விசாரணை ஆணையம் அமைக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் ஏற்கனவே முன்னாள் துணை வேந்தர்களுக்கு எதிராக ஊழல் வழக்குகள் தொடரப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விசாரணை ஆணையம் அறிக்கை அளித்தாலும், அதன் மீது அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கப் போவதில்லை என்றும் இந்த விவகாரத்தில் ஆளுநர் தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்த தலைமை வழக்கறிஞர், இந்த மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை வைத்தார்.

இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி, வரும் மார்ச் 15-ஆம் தேதிக்குள் சூரப்பாவின் மனு மீது பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதோடு, அதற்குள் ஒருவேளை விசாரணை ஆணையம் அறிக்கை அளித்தாலும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com