

திருச்சி,
தேரோட்டத்தின்போது தடையற்ற மின்சாரம் கிடைக்கும் வகையில் மலைக்கோட்டை, சமயபுரம் பகுதிகளில் புதைவட மின்பாதை அமைக்கும் பணி நிறைவுபெற்றுள்ளது. அடுத்த மாதம் முதல் இந்த வசதி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது.
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகியவை மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களாகும். இந்த கோவில்களில் நடைபெறும் சித்திரை தேரோட்டம் மற்றும் பங்குனி தேரோட்ட நிகழ்ச்சிகளின் போது, லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள்.
மேலும், தேரோட்டம், சாமி வீதியுலா செல்வதற்காக அந்த பாதைகளில் அவ்வப்போது மின்சாரம் துண்டிக்கப்படும் நிலை இருந்து வந்தது. இதனை தவிர்த்திடும் வகையில் அந்த பகுதிகளில் நிலத்தடியில் மின்பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பல ஆண்டுகளாக பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனை தொடர்ந்து, மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலை சுற்றியுள்ள 9.3 கி.மீ. நீளமுள்ள மேல்நிலை மின்கம்பிகளையும், சமயபுரம் மாரியம்மன் கோவிலை சுற்றியுள்ள 2.3 கி.மீ. நீளமுள்ள மேல்நிலை கம்பிகளையும் ரூ.7.6 கோடி செலவில் நிலத்தடி கேபிள்களாக மாற்றும் பணி தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்தால் தொடங்கி நடைபெற்று வந்தது. தற்போது இந்த பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் திருவிழாக் காலங்களில் மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகிய இருகோவில்களை சுற்றியுள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின்சாரம் துண்டிப்பு இருக்காது.
இதன் மூலம் சுமார் 1,293 இணைப்புகளுக்கு தடையற்ற மின்சாரம் வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இதற்கான கேபிள்கள் தரை மட்டத்தில் இருந்து சுமார் 3 அடி ஆழத்தில் பதிக்கப்பட்டுள்ளதால், இந்த வழித்தடங்களில் மின்கம்பிகள் அகற்றப்படும். இதன் மூலம் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும். ஆனால் பல மின்கம்பங்களில் தெருவிளக்குகளும் இருப்பதால் கம்பங்கள் அகற்றப்படுவதற்கு முன்பாக அந்த விளக்குகளை வேறு இடத்துக்கு மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக நிலத்துக்கு அடியில் மின்சார கம்பிகள் செல்லும் பாதைகளுக்கு கீழே சாலைகள் தோண்டுவதை தவிர்க்க வேண்டும் என்றும், குடிநீர் குழாய்கள் அல்லது கழிவுநீர் குழாய்களின் பராமரிப்புக்காக குழி தோண்டும் பணிகள் மேற்கொள்ள வேண்டி இருந்தால் மின்வாரிய அலுவலகத்துக்கு மாநகராட்சி ஊழியர்கள் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளனர். அடுத்த மாதத்துக்குள் இந்த வசதியை செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும் மின்வாரிய அதிகாரிகள் கூறி உள்ளனர்.
ஏற்கனவே கடந்த 2022-ம் ஆண்டு முதல் கண்டோன்மெண்ட் ராஜாகாலனி பகுதியில் நிலத்தடியில் கேபிள்கள் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக மேல்நிலை மின் கம்பிகளில் ஏற்படும் கோளாறுகளால் கோடை மற்றும் பருவமழை காலங்களில் பொதுவாக ஏற்படும் மின்தடைகள் அந்த பகுதியில் இல்லாமல் இருந்து வருகின்றன. மேலும், அங்கு சாலையோரம் இருந்த மின்கம்பங்களும் அகற்றப்பட்டதால் தெருக்கள் விசாலமாகி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.