

சென்னை,
சட்டசபை தேர்தலில் தேர்தலில் தவெகவிற்கு ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை கிடைக்காததால் குதிரை பேரத்தில் ஈடுபட்டு மாற்றுக் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் வசம் இழுக்கின்றனர் என்று எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
கவர்னரிடம் அதிகாரப்பூர்வமாக இதுதொடர்பாக ஏற்கனவே திமுகவினர் புகார் கடிதம் அளித்துள்ளனர்.
இந்நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்த பின்னர், நாங்கள் யாரும் பதவிக்கு ஆசைப்பட்டு செல்லவில்லை என்றும், தவெகவினர் அழைத்ததால் கட்சியில் இணைந்தோம் என்று கூறியிருந்தார்.
இதுதொடர்பாக, திமுகவினர் தற்போது கவர்னரிடம் புகார் கடிதம் அளித்துள்ளனர். இந்நிலையில், தான் சொந்த விருப்பத்தின் பேரிலேயே தவெகவில் இணைந்ததாகவும், இதற்காக யாரும் தனக்கு அழுத்தம் கொடுக்கவோ, தவெகவில் சேர அழைக்கவோ இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எம்ஆர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மகாபலிபுரத்தில் தவெகவில் இணைந்த போது அளித்த பேட்டியின்போது நான் பேசியதை தவறாகப் புரிந்து கொண்டனர். தவெகவில் இருந்து என்னை யாரும் அழைக்கவில்லை. அதிமுக தலைமை மீதான அதிருப்தியின் காரணமாக சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏ, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் என கொத்து கொத்தாக அனைவரும் சென்று தவெகவில் இணைந்தனர்.
கரூரிலும் அதிமுக நிர்வாகிகள் பலரும் தவெகவில் இணைய கூறி வற்புறுத்தினர். இதுதொடர்பாக எல்லா நிர்வாகிகளையும் அழைத்து கருத்து கேட்டோம். பெரும்பாலானோர் தவெகவில் இணையலாம் என்று கூறியதையடுத்து தவெகவில் இணைந்தோம். இதைத்தான் பேட்டியின்போதும் கூறினோம். அதனை தவறாகப் புரிந்து கொண்டனர்.
நாங்கள் கட்சியில் இணையும் வரை தவெகவினர் எங்களை அழைக்கவில்லை. எங்களுடைய நிர்வாகிகளின் எண்ணமும் தவெகவில் இணைய வேண்டும் என்பதாக இருந்தது. அதனால் தான் நகரச் செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் என்னோடு சேர்ந்து தவெகவில் இணைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.