

கோவை,
கோவை விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
கட்சியில் அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காகவே எடப்பாடிக்குக் கடிதம் எழுதினோம். கடிதத்திலேயே தெளிவாக உள்ளது. அந்தந்த மாவட்டத்தில் கட்சிக்காக உழைத்தவர்கள், எம்.ஜி.ஆர், அம்மா காலத்தில் இருந்து உழைத்தவர்கள், எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக உழைத்தவர்களுக்கு எல்லாம் பதவி வழங்கப்படவில்லை.
அதனால்தான் நான் உட்பட நத்தம் விஷ்வநாதன், தங்கமணி எல்லாம் பதவி வேண்டாம். நாங்கள் உருவாக்கிய கட்சியில் நாங்கள் உறுப்பினராக தொடர்கிறோம் என சொல்லி உள்ளோம். ஆனால் நீங்கள்தான் பல விதமாக ஊடகங்களில் போட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்.
அ.தி.மு.க. மகளிரணி கூட்டத்திற்கு வளர்மதி எப்போதும் கூப்பிடுவார். ஆனால் நேற்றைய கூட்டம் தொடர்பாக எங்களுக்கு தகவல் சொல்லவில்லை. அதற்கு முந்தைய நாளே கடிதம் கொடுத்துவிட்டோம். அதனால் கூட கூப்பிடாமல் இருந்திருக்கலாம். நான் சொன்ன ஜாம்பவான்களுக்கு அர்த்தம் வேறு. கட்சிக்காக எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் உழைத்தவர்கள், எடப்பாடியாருக்காக களத்தில் உழைத்தவர்கள், கட்சியை வளர்த்தவர்கள் என்ற கருத்தில் சொன்னேன்.
கடந்த 4-ம் தேதி பதவி எல்லாம் கொடுப்பார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் கொடுக்கவில்லை. ஏன் என அவர்களிடமே கேளுங்கள். எங்களை பொறுத்தவரை கடிதத்தில் தெளிவாக சொல்லி இருக்கிறோம். இன்னும் இந்த கட்சி நன்றாக இருக்க வேண்டும். பொதுச்செயலாளர் உட்பட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார்.
தொடர்ந்து சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் த.வெ.கவில் இணைந்தது குறித்த கேள்விக்கு எஸ்.பி.வேலுமணி பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.