‘3 ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை’ - மதுரை கலெக்டர் பிரவீன் குமார்

மருத்துவ சிகிச்சை அளிக்க 11 மருத்துவர்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டிருந்ததாக பிரவீன் குமார் தெரிவித்தார்.
மதுரை,
பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒருமாதமாக நடந்தன. வாடிவாசல், பார்வையாளர்கள் கேலரி, பாதுகாப்பு வசதிகள் போன்றவை செய்யப்பட்டு இருந்தன.
இதையடுத்து நேற்று முன்தினம் அவனியாபுரம், நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவடைந்த நிலையில், இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 19 காளைகளை அடக்கி கார்த்திக் என்பவர் முதலிடம் பிடித்தார். அவருக்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான கார் பரிசாக வழங்கப்பட்டது.
இந்த நிலையில், 3 ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை என மதுரை கலெக்டர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கோர்ட்டு உத்தரவுப்படி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது.
போட்டியில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க 11 மருத்துவர்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டிருந்தது. அவசர சிகிச்சை தேவைப்படுவோர் ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். 3 ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் உயிரிழப்பு உள்பட எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






