கடும் பனிப்பொழிவால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நச்சலூர் சுற்றுப்பகுதிகளில் தற்போது பெய்து வரும் கடும் பனிப்பொழிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்து ஏற்படாமல் தடுக்கும் வகையில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.
கடும் பனிப்பொழிவால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Published on

கடும் பனிப்பொழிவு

தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். இதன் பின்னர் மார்ச் மாதம் கோடை காலம் தொடங்கும். இதற்கு இடைப்பட்ட காலமான ஜனவரி, பிப்ரவா மாதங்களில் குளிரும், பனிப்பொழிவும் நிலவும். தற்போது வளிமண்டல சுழற்சி காரணமாக அடிக்கடி மழையும் பெய்து வருகிறது.

இந்த நிலையில் கரூர் மாவட்டம் நச்சலூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல்நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்துவரும் நிலையில் அவ்வப்போது திடீரென கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து நேற்று நச்சலூர், நங்கவரம், நெய்தலூர் காலனி, சேப்ளாப்பட்டி, முதலைப்பட்டி, சூரியனூர் ஆகிய பகுதிகளில் அதிகாலையில் இருந்து கடும் பனிப்பொழிவு பெய்தது. மேலும் பனிப்பொழிவு சாலையை மூடியவாறு பனிமூட்டம் சூழ்ந்தது. இதனால் சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு சிரமத்துடன் சென்றனர்.

சளி, இருமல், காய்ச்சல்...

பனியின் தாக்கத்தால் காலையில் நடைபயிற்சி செல்பவர்கள், குழந்தைகள், முதியவர்கள் வீட்டுக்குள் முடங்கினர். குளிர்ச்சியான சீதோஷன நிலையால் வீடுகளில் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய் உறைநிலைக்கு சென்றது. பனிப்பொழிவு காரணமாக வீடுகளில் இரவு நேரத்தில் பொதுமக்கள் மின்விசிறி பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர்.

இந்த பனிப்பொழிவால் பகல் நேரம் தவிர காலை மற்றும் மாலை, இரவு நேரங்களில் வெளியே வரும்போது குழந்தைகள், பெண்கள் உள்பட பெரும்பாலானோர் சுவெட்டர், குல்லா போன்ற குளிர்தடுப்பு ஆடைகளை அணிந்து கொண்டே வெளியே வருகின்றனர். திடீரென பெய்யும் மழை மற்றும் பனிப்பொழிவால் பலர் சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

காலையில் எழுந்த உடன் விவசாய நிலத்திற்கு சென்று தாங்கள் விளைவித்த பயிர்களின் வளர்ச்சியை பார்த்து ஆனந்தப்படும் விவசாயிகள் கூட தற்போது பெய்துவரும் கடும் பனிப்பொழிவுக்கு பயந்து பகல் நேரத்திற்கு தங்களின் விவசாய தோட்டத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. காலை நேரத்தில் வீடுகளில் பால் பாக்கெட் போடும் தொழிலாளர்கள், பால் ஊற்றும் விவசாயிகள் தங்களின் பணியை சற்று தாமதமாகவே தொடங்கினர். இந்த கடும் பனிப்பொழிவால் நச்சலூர் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com