

சென்னை,
போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில், ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, சென்னை மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணித்திட மண்டல வாரியாக அமைச்சர் பெருமக்களும், மண்டல கண்காணிப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களுக்கான பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில், ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர், ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை விரிவாக ஆய்வு மேற்கொண்டு, நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடித்திடவும், நீர்நிலைகள், கால்வாய்கள், மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டி தொட்டிகளில் ஆகாயத்தாமரைகள் அகற்றுதல் மற்றும் தூர்வாரும் பணிகளை முழுமையாக மேற்கொண்டு, மழைநீர் சீராக செல்லும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மழைநீர் தேங்கும் தாழ்வான பகுதிகளில் மழைநீரை உடனுக்குடன் வெளியேற்றிடும் வகையில் மோட்டார் பம்புகளை தயார்நிலையில் வைத்திடவும் மழைக்காலத்தில் பொதுமக்களை தங்க வைப்பதற்கான நிவாரண முகாம்களில் அடிப்படை வசதிகள் மற்றும் மைய சமையலறைகளில் உணவு பொருட்களின் இருப்பு ஆகியவற்றினை உறுதி செய்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
சென்னை மாநகராட்சி, நீர்வளத்துறை, சென்னை குடிநீர் வாரியம், மின்சாரத்துறை, நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட சேவைத்துறைகள் ஒருங்கிணைந்து முன்னெச்சரிக்கை பணிகளை சிறப்பாக மேற்கொண்டு, இம்மாத இறுதிக்குள் முடித்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் வாகே சங்கேத் பல்வந்த், (ஆலந்தூர்), செந்தில் ராஜ், (அடையாறு), மண்டல அலுவலர்கள், மாநகராட்சி உள்ளிட்ட சேவைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.