

சென்னை,
பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில், வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து அனைத்து அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
இன்று (31.10.2026) பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்ஆதவ் அர்ஜுனா தலைமையில், வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து அனைத்து அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் அண்ணாநகர் மண்டலம், திருமங்கலம், பெரியார் சமூக நலக்கூடத்தில் நடைபெற்றது.
பின்னர், அமைச்சர் அவர்கள் பருவமழையின் போது விழும் மரங்களை அகற்றுவதற்கான மர அறுவை இயந்திரங்கள், ஆபத்தான நிலையில் உள்ள மரங்களின் கிளைகளை அகற்றுவதற்கான டெலஸ்கோபிக் மர அறுவை இயந்திரங்களை பணியாளர்களுக்கு வழங்கினார்.
இக்கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் 15ஆம் தேதி வடகிழக்குப் பருவமழைதொடங்கியுள்ளது.
வருகின்ற நாட்களில் குறிப்பாக நவம்பர் 15 முதல் டிசம்பர் 10ஆம் தேதிக்குள் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறியப்படுகிறது. இதனை எதிர்நோக்கி சென்னை மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் ஒரு பகுதியாக வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்தி பணியாளர்கள் தயார் நிலையில் பணியாற்றிட வேண்டும்.
கடந்த மழையின் போது மழைநீர் தேங்கிய தாழ்வான பகுதிகளில் தனிக்கவனம் செலுத்தி மழைநீரை உடனுக்குடன் அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மின் பாதிப்புகளால் உயிரிழப்பு ஏற்படுவதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும். தாழ்வான மின் பெட்டிகளை உயர்த்தியும், சில இடங்களில் பழுதடைந்த மின்பெட்டிகளை வேறு இடங்களில் மாற்றியும், மின் கேபிள்களை நிலத்திற்குள் பதித்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆபத்தான நிலையில் உள்ள மரங்களின் கிளைகளை வெட்டி அகற்றுவதை தீவிரப்படுத்த வேண்டும். மழையின்போது விழுகின்ற மரங்களை உடனுக்குடன் அகற்றிட வேண்டும்.
நிவாரண மையங்கள் மற்றும் சமையல் கூடங்களை அனைத்து வசதிகளுடன் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும் மோட்டார் பம்புகள், வாகனங்கள், இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை செயல்படும் வகையில் தயார்நிலையில் வைக்க வேண்டும் பலவீனமான கட்டட பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை மழையினை முன்னிட்டு முன்கூட்டியே நிவாரண மையத்திற்கு அழைத்து செல்ல வேண்டும்.
சிறப்பு மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்திட வேண்டும். டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். தேவையற்ற பொருட்கள், கொசுப்புழு உருவாக வாய்ப்புள்ள பொருட்களை சுற்றுப்புறங்களில் அகற்றிட வேண்டும். இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்
மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அனைத்து அரசுத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது அலுவலர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு துறையிலும் மக்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஒரு பொறுப்பு அலுவலரை நியமித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மக்களுக்கு இடையூறின்றி போக்குவரத்தினை ஒழுங்குப்படுத்திட வேண்டும். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணை சிலருக்கு வழங்கப்படாததால் குடும்ப அட்டை உள்ளிட்ட பலன்களை மக்கள் பெற முடியவில்லை. இதன் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
சென்னை மாநகராட்சியின் தலைமையிடத்தில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இது 1913 என்ற உதவி எண் வாயிலாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதைப்போல அனைத்து மண்டலங்களிலும் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு மக்கள் அளிக்கும் புகார்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
குடும்ப அட்டைகள் கேட்டு விண்ணப்பத்துள்ளவர்களுக்கு குடும்ப அட்டை கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் உடனடி நடவடிக்கைகளை அனைத்து அலுவலர்களும் மேற்கொள்ள வேண்டும் என கூறினார்.
இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் சமீரன், சென்னை மாவட்ட கலெக்டர் எஸ்.மாலதி ஹெலன், மத்திய வட்டார துணை ஆணையாளர் கெளஷிக், சென்னைக் குடிநீர் வாரிய செயல் இயக்குநர் சுகபுத்ரா, மின்வாரிய இணை மேலாண்மை இயக்குநர் பாலசந்தர், கொளத்தூர் காவல் துணை ஆணையாளர் ராஜேஷ் கண்ணன், சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் கீதா பிரியா, சென்னை மாநகராட்சி, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, சென்னை குடிநீர் வாரியம், தமிழ்நாடு மின்பகிர்மான கழகம், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் காவல்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.