

சென்னை,
சென்னையில் உள்ள 383 அம்மா உணவகங்களை தினசரி சராசரியாக பயன்படுத்துவோர் எண்ணிக்கை 67,164ல் இருந்து 1,04,102 ஆக உயர்ந்துள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“சென்னை மாநகரில் வாழும் ஏழை எளிய மக்கள், கூலி வேலை செய்பவர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், கட்டிட தொழிலாளர்கள், பாரம் தூக்குபவர்கள் என குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்கள் மற்றும் சென்னைக்கு பணி நிமித்தமாக வந்து செல்பவர்கள் பயன் பெறும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் மற்றும் நோயாளிகள், அவர்களின் துணைவருபவர்கள் பயன்பெறும் வகையில் ராயபுரம், அண்ணாநகர் மற்றும் தேனாம்பேட்டை ஆகிய 3 மண்டலங்களில் உள்ள 7 அரசு மருத்துவமனைகளிலும் என மொத்தம் தற்போது 383 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் காலை நேரத்தில் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும், பொங்கல் ஐந்து ரூபாய்க்கும், மதிய நேரத்தில் சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம் மற்றும் கருவேப்பிலை சாதம் தலா ஐந்து ரூபாய்க்கும், தயிர் சாதம் மூன்று ரூபாய்க்கும் மற்றும் மாலை நேரத்தில் இரண்டு சப்பாத்திகள் மூன்று ரூபாய்க்கும் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவின்படி, அம்மா உணவகங்களை மேம்படுத்தி தரமான உணவுகளை மக்களுக்கு வழங்கிட மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் தினசரி சராசரியாக 67,164 பயனாளிகள் அம்மா உணவகங்களில் சாப்பிட்டு பயனடைந்து வந்த நிலையில் தற்போது தினசரி சராசரியாக 1,04,102 பயனாளிகள் அம்மா உணவகங்களில் சாப்பிட்டு பயனடைந்து வருகின்றனர். அம்மா உணவகங்களின் வாயிலாக கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.87,60,489/- வருவாய் வரப்பெற்ற நிலையில் தற்போது ரூ.1,35,78,548/- ஆக உயர்ந்துள்ளது.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.