

ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் எண்ணற்ற பேர் விவசாயத்தை நம்பி தான் வாழ்ந்து வருகின்றனர். இங்கு விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் கஷ்டப்பட்டு பயிர்களை காப்பாற்றி வருகின்றனர்.
அவ்வாறு கடினப்பட்டு வளர்க்கும் பயிர்களில் நோய் தாக்காமல் இருக்க உரமிட வேண்டிய நிலையில் தட்டுப்பாடு ஏற்படாமல் உரம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஆலங்குளம், மேலாண்மறைநாடு ஆகிய கிராமங்களில் உள்ள தனியார் உரக்கடைகளில் விவசாயிகளுக்கு தேவையான யூரியா, பொட்டாஷ் போன்ற உரங்கள் உள்ளதா என வெம்பக்கோட்டை வட்டார வேளாண்மைதுறை துணை இயக்குனர் முத்தையா, வெம்பக்கோட்டை வட்டார வேளாண்மைதுறை அதிகாரி அன்னபூரணி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஆலங்குளம், டி.கரிசல்குளம், கொங்கன்குளம், மேலாண்மறைநாடு, வலையபட்டி, கல்லமநாயக்கர்பட்டி, எதிர்கோட்டை ஆகிய கிராமங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது அவர்கள் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் கையிருப்பு உள்ளதா என கேட்டறிந்தனர். ஆய்வில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் அனைத்தும் இருப்பில் உள்ளது தெரியவந்தது.