

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதைக் காரணம் காட்டி, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த இரண்டு வாரங்களுக்குள் நான்காவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.46 உயர்ந்து ரூ.107.77-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.57 உயர்ந்து ரூ.99.55-க்கு விற்பனையாகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் மத்திய அரசை சாடியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: எண்ணெய் நிறுவனங்கள் லாபத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதில்லை. நஷ்டத்தை மட்டும் மக்களுடன் பகிர்ந்து கொள்கின்றன. பிரதமர் மோடி பெருநிறுவனங்களுக்காக வேலை பார்க்கிறார். கடந்த 7 காலாண்டுகளாக எண்ணெய் நிறுவனங்கள் லாபம் அடைந்தன. நிதியாண்டு 2024-ல் மட்டும் ரூ.81,000 கோடி லாபத்தை எண்ணெய் நிறுவனங்கள் பெற்றன. லாபத்தை பகிராதவர்கள், நஷ்டத்தை மட்டும் மக்களுடன் பகிர்கின்றனர்”என்று பதிவிட்டுள்ளார்.