

தூத்துக்குடி,
தூத்துக்குடியில் அரசரடி டோல்கேட் அருகே நின்று கொண்டிருந்த தண்ணீர் லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் மாற்று டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
பெங்களூரில் இருந்து திருச்செந்தூருக்கு ஒரு தனியார் ஆம்னி பஸ் நேற்று இரவு புறப்பட்டுள்ளது. இந்த பேருந்து இன்று காலை 9.30 மணி அளவில் மேல அரசரடி டோல்கேட் அருகே வரும்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த தண்ணீர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்தகோர விபத்தில் பேருந்தின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் பேருந்தின் முன் சீட்டில் அமர்ந்திருந்த மாற்று டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பஸ்ஸில் பயணம் செய்த 6 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.