

சென்னை,
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் நிறுவனரும், முன்னாள் மத்திய மந்திரியுமான எஸ்.ஜெகத்ரட்சகன் தலைமை தாங்கினார். மேடையில் கருணாநிதி படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அதன் முன்பு பெரிய அளவிலான மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள சிறுமலர் பார்வை திறன் குறைவுடையோர் பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் கருணாநிதி படத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த அந்த மோட்ச தீபத்தை ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள். ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் சிறுமலர் பார்வை திறன் குறைவுடையோர் பள்ளிக்கு ரூ.1 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.