

தூத்துக்குடி,
ராமநாதபுரம் அருகே உள்ள அப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவருடைய மகன் ராமமூர்த்தி (வயது 42). இவரும், இவருடைய நண்பரான அழகர் மகன் ஜெயகுரு(50) என்பவரும் ஒரு காரில் சாத்தான்குளம் அருகே உள்ள நடுவக்குறிச்சி பகுதியில் தங்கியிருந்த தங்களது உறவினர்களை சொந்த ஊருக்கு அழைத்து செல்வதற்காக நேற்று வந்திருந்தனர். காரை ராமமூர்த்தி ஓட்டி வந்துள்ளார்.
இவர்களது கார் தட்டார்மடம் அருகே உள்ள நடுவக்குறிச்சி முத்தாரம்மன் கோவில் அருகில் நேற்று மாலை வந்துகொண்டிருந்தபோது, எதிரே நாங்குநேரியை சேர்ந்த மாசானம் மகன் முருகன் என்பவர் அதிவேகமாக ஓட்டி வந்த டிப்பர் லாரி, எதிர்பாராதவிதமாக கார் மீது நேருக்கு நேர் பலமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஜெயகுரு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த ராமமூர்த்தி படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தட்டார்மடம் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ராமமூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த ஜெயகுருவின் உடலை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி ஓட்டுநரான முருகனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.