மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் ஒருவர் பலி

தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் இந்த விபத்தில் அவரது மனைவி மற்றும் பேரன் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் ஒருவர் பலி
Published on

தஞ்சை அருகே உள்ள வல்லம் பெரியார்நகரை சேர்ந்தவர் சையத்அபுதாஹிர் (வயது 55). இவருடைய மனைவி ஷாஜகான் பீவி (52). இவர்களின் பேரன் உமர் (8). இவர்கள் 3 பேரும் ஊருக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு வல்லம் அருகே பிள்ளையார்பட்டி ஊராட்சி அலுவலகம் அருகில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக களிமேடு பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் (20), அவருடைய நண்பர் தமிழ்ச்செல்வன் (22) ஆகியோர் மற்றொரு மோட்டார்சைக்கிளில் எதிரே வந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சையத் அபுதாஹிர் சென்று கொண்டிருந்த மோட்டார்சைக்கிளும், ஹரிஹரன் சென்ற மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்த சையத்அபுதாஹிர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவருடைய மனைவி ஷாஜகான் பீவி, பேரன் உமர் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த ஹரிஹரன், தமிழ்ச்செல்வம் ஆகியோரும் படுகாயம் அடைந்தனர்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சையத் அபுதாஹிர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com