

சென்னை
தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தொடர்ந்து காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் முழு ஆதரவுடன் த.வெ.க. ஆட்சியமைத்து விஜய் முதல்-அமைச்சராகி உள்ளார். சட்டசபையில் பெரும்பான்மையையும் நிரூபித்து இருக்கிறார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதல்-அமைச்சர் விஜய் இன்று தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். முதல்-அமைச்சரான பின்னர் அவர் மேற்கொள்ளும் முதல் டெல்லி பயணம் இதுவாகும். இன்று மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். தமிழகத்தில் அரசியல் சூழல் அடுத்தடுத்து பரபரப்பாக காணப்படும் நிலையில், பிரதமர் மோடியுடனான முதல்-அமைச்சர் விஜய்யின் இன்றைய சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
இதுபற்றி தெலுங்கானா முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பா.ஜ.க.வின் மூத்த தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளரிடம் இன்று அளித்த பேட்டியின்போது, தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் இந்த பயணம், தமிழகத்துக்கான நல்லுறவாக இருக்க வேண்டும். ஒரு விஜய் இன்னொரு விஜய்யை சந்திக்க இருக்கிறார். ஒரு வெற்றியாளர் மற்றொரு வெற்றியாளரை சந்திக்க உள்ளார்.
பிரதமர் மற்றும் முதல்-அமைச்சரின் இந்த சந்திப்பு சம்பிரதாய சந்திப்பாக இருக்க கூடாது. மத்திய, மாநில அரசின் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் அது இருக்க வேண்டும். மத்திய அரசுடன், மாநில அரசு இணக்கத்துடன் இருக்கும் என்ற வகையில் இருக்க வேண்டும்.
த.வெ.க., பா.ஜ.க. என பார்க்க கூடாது. மத்திய மற்றும் மாநில அரசு பார்க்க வேண்டும். முந்தைய தமிழக அரசு, மத்திய அரசை எதிர்க்கட்சியாக பார்த்தது. முந்தைய தமிழக அரசின் தொடர் எதிர்ப்பு மனநிலை மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது என்று கூறியுள்ளார். இந்த பயணம், தமிழகத்திற்கான நல்லுறவாக இருக்க வேண்டும் என கூறினார்.