தண்ணீர் வாளியில் தலைகுப்புற விழுந்த ஒரு வயது குழந்தை உயிரிழப்பு

ஒரு வயது குழந்தை, தண்ணீர் வாளியில் தலைகுப்புற விழுந்து உயிரிழந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பில் வசிப்பவர் முனீர் பாஷா. இவரது மனைவி ரேஷ்மா பானு. இவர்களுக்கு முகமது அர்ஷத் மற்றும் ஒரு வயதில் முகமது பகத் ஆகிய 2 குழந்தைகள் இருந்தனர். இவர்களுடன் ரேஷ்மா பானுவின் தங்கை ஷபானா பானுவும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.

நேற்று முனீர் பாஷா தனது பெரிய மகன் முகமது அர்ஷத்துடன் வேலைக்கு சென்று விட்டார். வீட்டிலிருந்த தங்கையிடம் ஒரு வயது குழந்தையான முகமது பகத்தை பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு ரேஷ்மா பானு கணவருக்கு சாப்பாடு கொடுக்க சென்று விட்டார்.

அவரது தங்கை குழந்தையை தனியாக விட்டுவிட்டு கழிவறைக்கு சென்று விட்டு திரும்பி வந்தபோது குழந்தை முகமது பகத், பக்கத்தில் இருந்த குளியல் அறையில் தண்ணீர் நிரம்பி இருந்த வாளிக்குள் தலை குப்புற விழுந்து அசைவின்றி கிடந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், குழந்தையை தூக்கிக்கொண்டு திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com