ஆன்லைனில் காதலித்து வெளிநாட்டு பெண்ணை கரம்பிடித்த திருமங்கலம் வாலிபர்

ஆன்லைனில் காதலித்து வெளிநாட்டு பெண்ணை திருமங்கலம் வாலிபர் கரம்பிடித்தார்.
ஆன்லைனில் காதலித்து வெளிநாட்டு பெண்ணை கரம்பிடித்த திருமங்கலம் வாலிபர்
Published on

ராமேசுவரம், 

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர், காளிதாஸ் (வயது 30). இவருடைய தந்தை சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

காளிதாஸ் செக் குடியரசு நாட்டில் வேலைபார்த்து வந்தார். கொரோனா காரணமாக ஊருக்கு வந்த அவர், கடந்த 2 ஆண்டுகளாக வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பணியாற்றி வந்தார். அப்போது அவருக்கும், செக்குடியரசு நாட்டை சேர்ந்த ஹானா பொம்குலோவா என்ற பெண்ணுக்கும் இணையதளம் மூலம் அறிமுகம் ஏற்பட்டது. பின்னர் ஆன்லைன் மூலமே இருவரும் காதலித்து வந்தனர்.

இதற்கிடையே ஹானாவை, தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொள்ள காளிதாஸ் விரும்பினார். தனது வீட்டில் அதுபற்றி தெரிவித்து சம்மதமும் வாங்கினார். ஏற்கனவே இந்திய கலாசாரத்தை பற்றி அறிந்திருந்த ஹானாவும் தனது காதலரை கரம்பிடிக்க தமிழகத்துக்கு வந்தார்.

இருவீட்டார் சம்மதத்துடன் அவர்களது திருமணம் ராமேசுவரத்தில், ராமநாதசாமி கோவிலோடு சேர்ந்த உப கோவிலான பத்ரகாளி அம்மன் கோவிலில் நேற்று நடைபெற்றது. பின்னர் மணமக்கள் ராமநாத சாமி கோவிலிலும் தரிசனம் செய்தனர். பக்தர்கள் பலர், அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களுடன் செல்பியும் எடுத்துக்கொண்டனர்.

இதுகுறித்து காளிதாஸ் கூறும்போது, "செக் குடியரசு பெண்ணை காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் ஒரு வாரத்திற்கு பிறகு 2 பேரும் மீண்டும் செக்குடியரசு நாட்டுக்கு செல்ல திட்டமிட்டு உள்ளோம்" என்றார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com