சட்டக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை; ஆன்லைனில் 26-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ரகுபதி தகவல்

சட்டக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு வரும் 26-ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சட்டக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை; ஆன்லைனில் 26-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ரகுபதி தகவல்
Published on

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப்பள்ளியின் மூலம் பயிற்றுவிக்கப்பட்டு வரும் 5 ஆண்டு (ஹானர்ஸ்) சட்டப் பட்டப் படிப்புகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்பட்டு வரும் 5 ஆண்டு சட்டப் படிப்புகளில் 2021-22-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இருந்து விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கும் நிகழ்வை, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று தொடங்கி வைத்தார். அதன் பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டி வருமாறு:-

தமிழகத்தில் உள்ள 14 அரசு சட்ட கல்லூரிகள், ஒரு சீர்மிகு சட்டக்கல்லூரி, ஒரு தனியார் சட்டக்கல்லூரி என மொத்தம் 16 சட்ட கல்லூரிகள் உள்ளன. அவற்றில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 2,275 இடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவங்களை மாணவர்கள் சமர்ப்பிக்கும் நிகழ்வு தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

வரும் 26-ந் தேதி வரை இந்த படிப்பிற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் அடிப்படையிலும், இடஒதுக்கீடு அடிப்படையிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும். மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டக்கல்லூரி அமைப்பதாக தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் சட்டக்கல்லூரி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com