வெள்ளியங்கிரி மலையேற மருத்துவ சான்றுடன் இணையவழி முன்பதிவு: அடுத்தாண்டு முதல் அமல்

7-வது மலையில் சுயம்பு லிங்கமாக வெள்ளியங்கிரி ஆண்டவர் காட்சியளிக்கிறார்.
வெள்ளியங்கிரி மலையேற மருத்துவ சான்றுடன் இணையவழி முன்பதிவு: அடுத்தாண்டு முதல் அமல்
Published on

கோவை,

கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பூண்டியில் புகழ்பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இது தென்கைலாயம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலையொட்டி 7-வது மலையில் சுயம்பு லிங்கமாக வெள்ளியங்கிரி ஆண்டவர் காட்சியளிக்கிறார். இதனால் இந்த மலை மீது பக்தர்கள் சென்று தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள்.

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை மட்டுமே மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதன் காரணமாக தினமும் ஏராளமான பக்தர்கள் மலைமீது சென்று வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். இந்த ஆன்மிக பயணத்தில் மலையேறுபவர்களில் ஒருசிலர் உயிரிழப்பது ஆண்டுதோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நடப்பாண்டில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்களின் உயிரிழப்பை தடுப்பதற்காக, அடுத்தாண்டு முதல் இணைய வழி முன்பதிவை மேற்கொள்ள வனத்துறையினர் திட்டமிட்டு உள்ளனர். இதுதொடர்பாக கோவை மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

வெள்ளியங்கிரி மலையேற்றம் மிகவும் கடினமான-செங்குத்தான மலைப்பயணம் ஆகும். இதில் நல்ல உடல் வலிமை, மிகுந்த மனவலிமை உடையவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். உடல் நிலை ஆரோக்கியம் தெரியாமல் மலையேறுவது ஆபத்தில் முடிகிறது. இதனால் அடுத்தாண்டு முதல் இணையத்தில் ஆதார் அட்டை, மருத்துவ சான்றுடன் பக்தர்கள் முற்றிலும் இலவசமாக முன்பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்டவை தொடர்பான உரிய மருத்துவ சான்றிதழ்கள் இல்லாதவர்கள் மலையேற்றத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். தரைத்தளத்தில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் இருப்பதால் மலையேற நினைக்கும் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோரிடம் மருத்துவ சான்றைக் கேட்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com