ஆன்லைன் ரம்மி தடை மசோதா: விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கவர்னர் உறுதி - அமைச்சர் ரகுபதி பேட்டி

ஆன்லைன் ரம்மி தடை மசோதா பரிசீலனையில் உள்ளதாகவும் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் கவர்னர் உறுதி அளித்துள்ளதாக அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
ஆன்லைன் ரம்மி தடை மசோதா: விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கவர்னர் உறுதி - அமைச்சர் ரகுபதி பேட்டி
Published on

சென்னை,

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா சட்டசபையில் கடந்த அக்டோபர் மாதம் 19-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. அதன்பிறகு இந்த சட்ட மசோதாவை கவர்னரின் ஒப்புதலுக்கு சட்ட அமைச்சகம் அனுப்பியது. ஆனால் இந்த சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் வழங்கவில்லை.

கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், இந்த மசோதா தொடர்பாக கவர்னர் சில விளக்கம் கேட்டிருந்தார். அதில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ள தண்டனைகள் விதிப்பது தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதா? என்றும் இதற்கு முன்பாக கொண்டு வரப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு நீதிமன்றம் கேட்ட சில கேள்விகளையும் கவர்னர் குறிப்பிட்டு இருந்ததாக தெரிகிறது.

கவர்னர் கேட்ட விளக்கங்களுக்கு பதிலளித்து தமிழக அரசு கடிதம் அனுப்பியது. அந்த விளக்கத்தை கவர்னர் ஆய்வு செய்துவருகிறார். இந்த நிலையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, இன்று கவர்னர் ஆர்.என்.ரவியை சென்னை ராஜ்பவனில் நேரில் சந்தித்தார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி கூறியதாவது:- ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து கவர்னருக்கு நேரில் விளக்கம் அளித்தோம். கவர்னர் சில சந்தேகங்கள் கேட்டார். அதற்கு பதிலளித்தோம். ஆன்லைன் ரம்மி தடை மசோதா பரிசீலனையில் உள்ளதாகவும் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் கவர்னர் உறுதி அளித்துள்ளார் என்று கூறினார்.

மேலும், இதுவரை 21 மசோதாக்கள் நிலுவையில் இருக்கின்றன. குறிப்பிட்ட காலத்திற்குள் கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என எந்த கால நிர்ணயமும் கிடையாது. எனவே குறிப்பிட்ட காலத்தை நிர்ணயிக்கும்படி நாம் கேட்க முடியாது என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com