தி.மலையில் அண்ணாமலையார் மலை மீது ஏற 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

தி.மலையில் கார்த்திகை தீபத்திருநாள் அன்று அண்ணாமலையார் மலை மீது ஏற 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தி.மலையில் அண்ணாமலையார் மலை மீது ஏற 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் 6-ந்தேதி ஏற்றப்படுகிறது. இதனை காண திருவண்ணாமலைக்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், தீபத்திருவிழா அன்று காலை 06.00 மணிக்கு செங்கம் சாலை கலைஞர் கருணாநிதி அரசுக் கலை கல்லூரி வளாகத்தில் சிறப்பு மையம் திறக்கப்பட்டு 2500 பக்தர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதி சீட்டு முதலில் வரும் 2500 பக்தர்களுக்கு முன்னுரிமை (First Come First Serve Basis) என்ற அடிப்படையில் வரிசை கிராமாக (Queue System) அனுமதி சீட்டு மேற்குறிப்பிட்ட சிறப்பு மையத்தில் வழங்கப்படும்.

மலை ஏற அனுமதி கோரும் பக்தர்கள் தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் பிற இதர அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலினை சமர்ப்பித்து அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ளலாம். பக்தர்கள் பேகோபுரம் அருகில் உள்ள வழியில் மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். மற்ற வழிகளில் மலை ஏற கண்டிப்பாக அனுமதி வழங்கப்பட மாட்டாது.

06.12.2022 அன்று பிற்பகல் 02.00 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதிக்கப் படுவார்கள். மலை ஏறும் பக்தர்கள் தண்ணீர் பாட்டில் மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் காலி தண்ணீர் பாட்டில்களை மலையிலிருந்து இறங்கி வரும் போது திரும்ப கொண்டு வர வேண்டும். மலை ஏறும் பக்தர்கள் கற்பூரம், பட்டாசு மற்றும் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.

மலை ஏறும் பக்தர்கள் கொண்டு செல்லும் நெய்யினை அனுமதிக்கப்பட்ட கொப்பரையில் மட்டுமே ஊற்ற வேண்டும், வேறு எந்த இடத்திலும் நெய்யினை ஊற்றவோ, நெய் தீபம் ஏற்றவோ கூடாது. மேற்கண்ட நிபந்தனைகளை தவறாது கடைபிடித்து அருள்மிகு அண்ணாமலையார் மலை மீது ஏறுவதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு 30 லட்சம் பக்தர்கள் தீப திருவிழாவை காண வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 12 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com