சம்பா பருவத்துக்கு உகந்த நெல் விதைகளை மட்டுமே விற்க வேண்டும் - விதை ஆய்வு துணை இயக்குனர் அறிவுறுத்தல்

விதைகளை விற்பனை செய்யும்போது விவசாயிகளுக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும் என சுஜாதா அறிவுறுத்தியுள்ளார்.
சம்பா பருவத்துக்கு உகந்த நெல் விதைகளை மட்டுமே விற்க வேண்டும் - விதை ஆய்வு துணை இயக்குனர் அறிவுறுத்தல்
Published on

தஞ்சாவூர்,

சம்பா பருவத்துக்கு உகந்த நெல் விதைகளை மட்டுமே விற்க வேண்டும் என தஞ்சை மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதா அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சம்பா பருவம்

தஞ்சை மாவட்டத்தில் சம்பா பருவ நெற்பயிர் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தற்போது தயாராகி வருகின்றனர். தனியார் விதை விற்பனையாளர்கள், சான்று விதைகளில் இரு அட்டைகள் (வெள்ளை அல்லது நீல நிறம்) முறையே சான்று அட்டை மற்றும் விவர அட்டை பொருத்தப்பட்ட விதைகளை மட்டுமே விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். விவர அட்டையில் பயிர், ரகம், குவியல் எண். காலாவதி நாள், பயிர் செய்ய ஏற்ற பருவம் உள்பட 14 வகையான விவரங்கள் விதைச் சட்ட விதிகளின்படி கட்டாயம் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.

அனைத்து தனியார் விதை விற்பனையாளர்களும் விதை இருப்பு பதிவேடு மற்றும் முளைப்பு அறிக்கை ஆகியவற்றை கட்டாயம் பராமரிக்க வேண்டும். குவியல் வாரியாக தனித்தனி பக்கங்களில் விதை இருப்பு விவரங்களை பதிவிட வேண்டும். நடப்பு சம்பா பருவத்தில் 150 முதல் 160 நாட்கள் வயதுடைய நீண்டகால நெல் ரகங்களே ஏற்றவை. நீண்டகால ரகங்களான சாவித்திரி (சிஆர் 1009), சி.ஆர். 1009 சப்-1 மற்றும் ஏ.டி.டி. 51 போன்ற ரகங்களை முதலில் விற்பனை செய்ய வேண்டும்.

2,750 டன் விதைநெல்

அதனைத் தொடர்ந்து மத்தியகால நெல் ரகங்களான ஏ.டி.டி.38, 39, 42, 46, வெள்ளைப் பொன்னி, ஐ.ஆர். 20, கோ 43, 46, 50 மற்றும் மேம்படுத்தப்பட்ட வெள்ளைப்பொன்னி போன்ற ரகங்களை விற்பனை செய்ய வேண்டும். வெளிமாநில ரகங்களான பி.பி.டி. 5204, எம்.டி.யூ. 7029, என்.எல்.ஆர். 34449, கே.என்.எம்.1638 போன்ற விதைகளை விற்பனை செய்யும்போது விற்பனையாளர்கள் படிவம் 2-ஐ கட்டாயம் வைத்திருக்க வேண்டும். விதைகளை விற்பனை செய்யும்போது விவசாயிகளுக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும்.

நீண்டகால மற்றும் மத்தியகால நெல் ரகங்களில் சுமார் 2,750 டன் விதைநெல் தனியார் விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவற்றின் முளைப்புத்திறனை உறுதி செய்யும் வகையில் கும்பகோணம், தஞ்சை மற்றும் பட்டுக் கோட்டை விதை ஆய்வாளர்களால் அலுவலக விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, தஞ்சை விதை பரிசோதனை நிலையத்திற்கு முளைப்புத்திறன் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது.

உரிய நடவடிக்கை

எனவே சம்பா பருவத்துக்கு ஏற்ற நெல் ரகங்களை மட்டுமே விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். சம்பா பருவத்துக்கு உகந்தது அல்லாத நெல் ரகங்களை விற்பனை செய்தாலோ அல்லது விதைச் சட்ட விதிகளை பின்பற்றாமல் விற்பனை செய்தாலோ, விதைச் சட்டம்-1966, விதை விதிகள்-1968 மற்றும் விதை கட்டுப்பாட்டு ஆணை-1983 ஆகியவற்றின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேற்கண்டவாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com